தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராடினாலும், சமூகத்தில் நிகழும் மனித உரிமை மீறலுக்கு எதிராகப் போராடினாலும் சரி… பெண்களின் போராட்டம் எப்போதும் வீரியமானதாகவே இருக்கிறது. சமையல், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை பெண்களுக்கு மட்டும் உரியதாக்குவது தவறான போக்காக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அதுதான் நடைமுறையில் உள்ளது. ஆதலால் தங்கள் குழந்தைகளின ஆரோக்கியமான எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கும் போது பெண்கள் வெகுண்டு எழுகின்றனர். லண்டனில் நடந்த தாய்மையின் போராட்டம்தான் இந்த வார போராட்டக்களத்தின் பகிர்வு.
போர்களும் கலவரங்களும் உலகின் இயற்கைச் சூழலை அழிக்க, அவற்றுக்கெதிரான போராட்டங்களும் ஆங்காங்கே வெடித்து வருகின்றன. அந்த வகையில் 1981-ம் லண்டனில் நடந்த கிரீன்ஹாம் காமன் போராட்டம் முக்கியமானது.
லண்டனில் உள்ள ஃபெர்க்சிர் என்னுமிடத்தில் கிரீன்ஹாம் காமன் என்ற இடம் உள்ளது. 1980-ம் ஆண்டில் அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணைகளை, கிரீன் காமில் வைக்கத் திட்டமிட்டனர். இது சுற்றுச்சூழலையும் எதிர்கால தலைமுறையையும் பாதிக்கக்கூடும் என்பதால் இதற்கு எதிரான போராட்டம் வெடித்தது. 36 பெண்கள் 4 ஆண்கள் மற்றும் குழந்தைகள் வேல்ஸ் தலைநகரமானகார்டிஃப்பிலிருந்து கிரீன்ஹாம் வரை ஏவுகணைகளுக்கு எதிரான பதாகைகளைச் சுமந்துகொண்டு நடைப்பயணம் மேற்கொண்டனர். ஆனால் நடைப்பயணம் பெருமளவில் கவனத்தை ஈர்க்காததால், 1981-ம் ஆண்டு கீரீன்ஹாமிலேயே தங்கி அமைதிவழியில் போராடத் தொடங்கினர்.
அமைதி வழி போராட்டத்தில் இணைய லண்டன் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் பல நாடுகளில் உள்ள பெண்கள் போராட்டக்களத்திற்கு வந்து தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டத்தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கேயே சமைத்து, உறங்கினர். அவர்கள் தங்குவதற்கான கூடாரங்களை பெண்களே அமைத்துக் கொண்டனர். இதற்கு கிரீன்ஹாம் காமன் பீஸ் கேம்ப்(GREENHAM COMMON PEACE CAMP) என்று பெயரிடப்பட்டது. சிறு குழுவாக தொடங்கிய போராட்டம் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைய வலிமைபெற்றது.
கடுமையான மழையிலும் வெயிலிலும் போராட்டத்தின் வீரியம் சற்றும் குறையவில்லை. அங்கு மின்சார வசதியில்லை. போதுமான தண்ணீர் வசதி இல்லை. எத்தனை பிரச்னைகள் வந்தாலும் பெண்களின் போராட்டம் வலிமை பெற்றது. 1983-ம் ஆண்டு ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் மனிதச்சங்கிலியாக இணைந்து கிரீன் ஹாமில் ஏவுகணை வைப்பதற்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கான பெண்கள் (Women for life on earth) என்று தங்களை அடையாளப்படுத்திக் கொணடனர்.
இப்போராட்டத்தின் போது பெண்கள் தங்களின் திருமண ஆடைகளை கிரீன்ஹாமில் உள்ள வேலிகளில் தொங்கவிட்டனர். அதே போல் குழந்தைகளின் விளையாட்டுப்பொருள்கள், துணிகளைக் காயவைத்து தங்களின் தாய்மையை ஆயுதமாக்கிப் போராடினர். பல இன்னல்களுக்கு இடையில் நடந்த போராட்டம் வெற்றியும் பெற்றது. 1987-ம் ஆண்டு சோவியத் யூனியனும், அமெரிக்காவும் இணைந்து கையெழுத்திட்ட பிறகு அனைத்து அணு ஏவுகணைகளும் கிரீன்ஹாமிலிருந்து எடுக்கப்பட்டன. அந்த கேம்பானது மற்ற அணு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டக்களமாக வருடம் 2000 வரை தொடர்ந்தது. அதற்கு பின்னரே கலைக்கப்பட்டது.