`சூப்பர் ஸ்டார்’ பட்டம் தொடர்பான அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற பரபரப்பான சூழலுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்புடன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த `ஜெயிலர்’ திரைப்படம் இன்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் `ஜெயிலர்’ படத்தைக் கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூரில் நான்கு திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது.
இதில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்றாகச் சேர்ந்து ‘ஜெயிலர்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். படம் குறித்து தங்களது கருத்தையும் ரஜினி மன்ற நிர்வாகிகளிடம் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் வெளிப்படுத்தினர். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத நடைமுறையினை தஞ்சாவூரில் அனைத்து ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளும் கடைப்பிடித்தது பலரது கவனத்தையும் பெற்றது.
ரஜினி ரசிகர் மன்றத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரான ரஜினி கணேசன் ‘ஜெயிலர்’ படம் வெளியானதைத் தொடர்ந்து நான்கு நபர்களுக்கு அயன் பாக்ஸ் வழங்கினார். படம் முடிந்த பிறகு அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் சுமார் 500 நபர்களுக்குப் பிரியாணி வழங்கினார். படம் தொடங்கும் முன்பு கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் தரும.சரவணன், விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் விஜய் சரவணன், அஜித் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்டத் தலைவர் வின்செண்ட், சூர்யா, சிம்பு உள்ளிட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளும் தியேட்டருக்கு வந்தனர்.
ரஜினி கணேசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்தனர். இந்தச் சம்பவம் ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் கவனத்தையும் பெற்றது. இது குறித்து ரஜினி கணேசனிடம் பேசினோம். “தஞ்சாவூரில் அனைத்து நடிகர்களின் ரசிகர்கள் சார்பாக அனைத்து ரசிகர் நற்பணி மன்றங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறோம்.
ரஜினி, கமல், விஜய், அஜித் என எந்த நடிகரின் படங்கள் ரிலீஸானாலும் அந்த மன்ற நிர்வாகிகள் சுப நிகழ்ச்சிக்கு அழைப்பது போல் முறையாக மற்ற நடிகருடைய மன்ற நிர்வாகிகளைப் படம் பார்க்க அழைப்பார்கள். அவர்கள் வருவதுடன் குறிப்பிட்ட நடிகரின் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்வார்கள். இன்று `ஜெயிலர்’ படம் வெளியானதால் நான் கமல், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அழைத்திருந்தேன்.
அவர்கள் வந்து எனக்குச் சிறப்புச் செய்ததுடன் என்னுடன் சேர்ந்து படம் பார்த்தனர். முடிந்ததும் படம் சூப்பரா இருக்கு எனப் பாராட்டினர். எங்களுக்குள் போட்டி இருந்தாலும் அதைவிட நட்பும் அன்பும் கூடுதலாக இருக்கு. யார் படம் வெற்றி அடைந்தாலும் அதைக் கொண்டாடுவோம். எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இதுவரை வந்தது கிடையாது.
மற்ற ஊர்களில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக்கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் தஞ்சாவூரில் அது போல் எதுவும் நடந்ததில்லை. ஒரு ரசிகர் மன்றத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதனைக் கூட்டமைப்பு சார்பாகப் பேசித் தீர்த்து வைத்துவிடுவோம். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து படம் பார்ப்பதுடன் மனக்காயம் ஏற்படாத வகையில் விமர்சனம் செய்து கொள்வோம்.
நடிகர்களைத் தலைவராக ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் பெயரைச் சொல்லி அடித்துக்கொண்டு சண்டை போட்டுக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. மாறாக சமூக அமைதி, சீரமைப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து நடிகரின் ரசிகர்களும் கரம் கோர்த்திருக்கிறோம். எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒரே குடும்பமாக இருந்து வருகிறோம்.
இளம் நடிகர்களின் ரசிகர்களை சீனியரான நாங்கள் வழி நடத்துகிறோம். இதனை அனைத்து ஊரிலும் பின்பற்றினால் போட்டி பொறாமையால் உண்டாகும் பிரச்னை எதுவும் இருக்காது. எந்த ஒரு நடிகரின் படம் ரிலீஸானாலும் அதன் வர்த்தகம் பாதிக்காமல் நல்ல வசூல் ஆகும். முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்” என்றார்.