மார்ச் 25, 1989… ஜெயலலிதா சேலையை பிடிச்சு இழுத்து… திமுகவுக்கு மறந்துடுச்சா? நிர்மலா சீதாராமன் சரமாரி அட்டாக்!

நாடாளுமன்றத்தில் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் விவகாரம், நம்பிக்கையில்லா தீர்மானம், பிரதமர் மோடி மவுனம், எதிர்க்கட்சிகள் அமளி, ஆர்ப்பாட்டம் என அதிரி புதிரி சம்பவங்களாக நடந்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

பிரதமர் மோடி விளக்கம்

இதற்கு ஆளுங்கட்சி தரப்பிலும் விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார். இதற்கிடையில் திமுக உறுப்பினர்களை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பெண்கள் எல்லா இடங்களிலும் தான் துன்புறுத்தப்படுகின்றனர்.

நிர்மலா சீதாராமன் பதிலடி

மணிப்பூராக இருந்தாலும் சரி. ராஜஸ்தானாக இருந்தாலும் சரி. எங்கு நடந்தாலும் அது கட்டாயம் ஒடுக்கப்பட வேண்டும். இதில் எந்தவித அரசியலுக்கும் இடமில்லை. திமுக உறுப்பினர்கள் இந்த அவையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மார்ச் 25, 1989ல் நடந்த சம்பவத்தை மறந்து விட்டார்களா? அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தினர்.

ஜெயலலிதா சம்பவம்

அதைப் பார்த்து சிரித்தனர். அப்போது ஜெயலலிதா ஒரு உறுதிமொழி எடுத்தார். இனிமேல் முதலமைச்சராகி தான் இந்த அவைக்குள் காலடி எடுத்து வைப்பேன் என்று கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சராக தான் அவைக்கு திரும்பிதாக குறிப்பிட்டார். இதையடுத்து இந்தி திணிப்பை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்வதாக திமுக எம்.பி கனிமொழி பேசியிருந்தார்.

செங்கோல் விவகாரம்

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிலப்பதிகாரத்தின் படி பிரதமர் மோடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். இதையொட்டியே நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக செங்கோல் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றில் இருந்து ஒதுக்கி அருங்காட்சியகத்தில் போய் வைத்துவிட்டனர்.

ஐ.நா சபையில் தமிழ்

இது தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அமல்படுத்தக் கூடாது என்ற திணிப்பை திமுக தான் செய்து கொண்டிருக்கிறது. காசி தமிழ் சங்கத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையில் எந்த அளவிற்கு ஆழமான தொடர்பிருக்கிறது என்பதை பார்த்திருப்பீர்கள். ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியை முதல்முறை ஒலிக்க செய்தவர் பிரதமர் மோடி என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.