பெங்களூரு : ”ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா தயவால் தான், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. ஒப்பந்ததார்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் மனநிலைக்கு முறையான சிகிச்சை தேவை இல்லையா’ என முன்னாள் முதல்வர் குமாரசாமி, முதல்வர்சித்தராமையா மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் குமாரசாமி வெளியிட்ட அறிக்கை:
ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, முந்தைய ஆட்சியில், 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றஞ்சாட்டினார். இவரது அருளால் சித்தராமையா ஆட்சிக்கு வந்தார். தற்போது அதேபோன்று மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். இது, எத்தகைய மனநிலையை வெளிப்படுத்துகிறது. இதற்கு சிகிச்சை தேவை இல்லையா.
தினமும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். கமிஷன் வியாபாரத்தில் சிக்கி தவிப்பவர்களின் பரிதாப கதைகளுக்கு முற்றுப்புள்ளி உண்டா. உங்களின் காசு பறிக்கும், பணம் பறிக்கும் கொடுமை எப்போது முடிவுக்கு வரும்.
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கண்ணீரால் நீங்கள் சபிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா. மனவளர்ச்சி குன்றிய அரசு, ஊழியர்களை பணத்திற்காக இடைவிடாது துன்புறுத்துவதா. இதுதான் சமூக நீதியா. ஊழல் குற்றச்சாட்டுகளை பரிதாபமாக மாற்றும் கலை எனக்கு தெரியாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement