வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கலவரத்தின்போது தன்னை ஆறு ஆண்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக மற்றொரு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் அடங்குவதற்குள் மணிப்பூரில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சூரச்சந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் மே 3ம் தேதி நடந்த கலவரத்தின்போது தான் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: என் வீடு சூரச்சந்த்பூரில் உள்ளது. கடந்த மே 3ம் தேதி கலவரம் வெடித்த நாளில் எங்கள் பகுதியில் இருந்த பல வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரக்காரர்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்த்த நாங்கள் அச்சத்தில் அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறினோம்.
நான், என் இரு மகன்கள், எனது சகோதரரின் மகள், எனது மைத்துனி ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியேறினேன். நாங்கள் வேகமாக ஓடினோம். எனக்கு முன்னால் என் மைத்துனி ஓடிக் கொண்டிருந்தார்.
நான் வேகமாக ஓடும்போது திடீரென கால் தவறி கீழே விழுந்துவிட்டேன். உடனே என் மைத்துனி என்னை நோக்கி வந்தார். நான் அவரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு ஓடும்படி அறிவுறுத்தினேன். அவரும் ஓடிவிட்டார்.
நான் மேலே எழுந்தபோது என்னை 6 ஆண்கள் அடங்கிய கும்பல் ஒன்று சுற்றி வளைத்தது. அந்த ஆறு ஆண்களும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். நான் எனது குடும்பத்தின் நலன் கருதி இதனை வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி வேண்டி குரல் கொடுத்துவரும் சூழலில் நான் துணிந்து புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement