பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடர்வதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மழையால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு கணிசமான அளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருவதால் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ஸ்ரீ ரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரத்து 707 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக 5 ஆயிரத்துக்கும் குறைவான அளவிலே திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று அதிகரிக்கப்பட்டது.
மைசூரு மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2283.80 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை: கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கி உள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 688 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 5 ஆயிரத்து 875 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 12 ஆயிரத்து 582 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேகேதாட்டு அருகே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தை கடந்து, மேட்டூர் அணையை நோக்கி பாய்கிறது.
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: காவிரி மேலாண்மை ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் 11 (இன்று) நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை செயலர்கள், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் ஜூலை வரை பெய்த மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.