செங்கல்பட்டு சாலை விபத்து | உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை சந்திப்பு எதிரில் இன்று (ஆக.11) காலை சென்னை நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மூன்று இருசக்கர வாகனங்களின் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்துக்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பார்த்தசாரதி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதிக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”, என்று அவர் கூறியுள்ளார்.

விபத்து நடந்தது எப்படி? சென்னையை அடுத்த பொத்தேரி அருகே வெள்ளிக்கிழமை காலை டிப்பர் லாரி மீது இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. பொத்தேரி ரயில்வே கேட்டை கடந்து, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த 4 இருசக்கர வாகனங்கள் எதிரே வந்த டிப்பர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் உள்ள தடுப்பு பகுதியில் மோதியுள்ளது .

இந்த விபத்தில், இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் படுகாயமடைந்தனர். முதல்கட்ட தகவலின்படி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸார், விபத்தின் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போக்குவரத்து பாதிப்புகளை சரிசெய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.