சென்னைப் பல்கலை: விசாரணை கோரும் அரசு; ஒப்புதல் தராத ஆளுநர் – துணைவேந்தர் விவகாரத்தில் நடப்பது என்ன?

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆளுநர் ஒப்புதல் தராததால், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையில் தாமதமாகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடக அறிவியல்துறையில் இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில், ரூ.3 கோடி வரை நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கௌரி மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பொறியியல் சார்ந்த படிப்பைப் படித்த கௌரி, கலை மற்றும் அறிவியல் சார்ந்த பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக பணியாற்றியதாகவும் ஆரம்பத்தில் குற்றம்சாட்டப்பட்டது. இதோடு, சென்னைப் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்களுக்கு முறைகேடாகச் சான்றிதழ் வழங்கியதும் அண்மையில் வெளியாகி, கல்வியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னைப் பல்கலைக்கழகம்

தொலைதூரக் கல்வி முறையில் நடந்த முறைகேட்டில் துணைவேந்தர் கௌரிக்குத் தொடர்பு இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை சந்தேகித்த நிலையில், இரண்டு புகார்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு, வேந்தர் என்ற முறையில் ஆளுநரிடம் அரசு கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரியது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் தராததால் லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை தாமதமாகியிருக்கிறது. 2020-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கௌரியின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவுபெறுகிறது. இதனால் அதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் தர கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக சட்டப்பேரவை பொது தணிக்கைக்குழுத் தலைவரும், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவருமான செல்வப்பெருந்தகை, “சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத்தான் செல்கிறோம். அங்கு சி.ஐ.ஜி ரிப்போர்ட் அடிப்படையில் என்னென்ன தவறு செய்திருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வுசெய்வோம். இந்த ஒரு பல்கலைக்கழகம் மட்டுமின்றி சப் கமிட்டி அமைத்து தினம் தினம் இனி எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் ஆளுநரிடம், விசாரணைக்கு அனுமதி கோரி பரிந்துரைக்க கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

துணைவேந்தர் கௌரி

அவரின் பதிலுக்குப் பிறகே இவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும். கடந்தகாலங்களில் பல்கலைக்கழகத்தில், பல முறைகேடுகள், ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை தொடர்பாகவும் தொடர்ச்சியாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டுவருகிறோம். ஊழல் முறைகேடு தொடர்பாக, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியிருக்கிறோம். அது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

செல்வப்பெருந்தகை

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “இந்த வழக்கைப் பொறுத்தவரை, குற்றம்சாட்டப்பட்டவர் துணைவேந்தராக இருப்பதால் தமிழக அரசு, ஆளுநரிடம் அனுமதி கோரியிருக்கிறது. ஆளுநர் கொடுக்கும் பதிலைப் பொறுத்தே எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். இது உடனடியாகக் கிடைத்தால் விசாரணையைத் தொடங்குவோம். தாமதமானால், அதற்கேற்றாற்போல் விசாரணையின் போக்கு அமையும். இது அரசுக்கும் ஆளுநருக்குமுள்ள விவகாரம்” என்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை

மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரியிடம் விளக்கம் கேட்கத் தொடர்புகொண்டோம். “ எனது பணிக்காலம் முடிவடையவிருப்பதால், எங்கு மீண்டும் பணியில் தொடர்ந்துவிடுவாரோ என்கிற காரணத்தால் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே என்மீது வைக்கப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் கொடுத்து அதெல்லாம் முடித்துவைக்கப்பட்டன. ஏன் இப்போது அதைத் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.