`தேசியக்கொடி முதல் காந்தி பெயர் விவகாரம் வரை…’ – மோடி குற்றச்சாட்டுக்கு அழகிரி காட்டமான பதில்!

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மௌனம் காக்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தன. அதைத் தொடர்ந்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தனர். நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி

அந்த அறிக்கையில், “கடந்த 100 நாள்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் வரலாறு காணாத வன்முறையை எதிர்கொண்டு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மனித சமுதாயம் இதுவரை காணாத கொடுமை பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை 160 பேர் பலியாகியிருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசத் தயாராக இல்லை. இது குறித்து விவாதிக்க முயற்சி செய்து வாய்ப்பில்லாத நிலையில்தான், பிரதமர் பேச வலியுறுத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி 2 மணி 10 நிமிடங்கள் பேசினார். அதில், பிரதமர் பேச்சில் முதல் 90 நிமிடம் வரை மணிப்பூரைப் பற்றி பேசவில்லை. எதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதோ அது குறித்து பேசாமல் புறக்கணித்ததனால் தான் வெளிநடப்பு செய்ய நேர்ந்தது. தேசியக் கொடியிலிருந்து மூவர்ணத்தை காங்கிரஸ் எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார். விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சியின் ராட்டை பொறித்த மூவர்ணக் கொடியை அடிப்படையாக வைத்து, அதில் அசோக சக்கரத்தை இடம் பெறச் செய்து அன்றைய அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு அறிமுகம் செய்து உருவானது தான் தேசியக் கொடி.

ராகுல் காந்தி

தேசியக் கொடியின் வரலாறு அறியாத ஒருவரை பிரதமராக நாம் பெற்றிருக்கிறோம். 1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகு தொடர்ந்து 52 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியே ஏற்றவில்லை. விடுதலைப் போராட்டத்திலோ, வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலோ பங்கு கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்., வழிவந்த பா.ஜ.க., 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. மேலும் காந்தி என்ற பெயரையும் திருடிக் கொண்டது என்று கூறியிருக்கிறார். இந்திரா காந்தி அவர்களுடைய கணவர் பெயர் பெரோஸ் காந்தி என்பதால் தான் காந்தி என்ற பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என அழைக்கப்படுகிறது.

அம்பேத்கரை இரண்டுமுறை தோற்கடித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று ஒரு அபவாதத்தை பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடந்த போது, லாகூர் பகுதியிலிருந்து பி.ஆர். அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார். பிரிவினைக்கு பிறகு அந்த பகுதி பாகிஸ்தானுக்கு சென்று விட்டதால் அன்றைய பம்பாய் பகுதியில் காங்கிரஸ் உறுப்பினரை பதவி விலகச் செய்து அந்த இடத்திலிருந்து பி.ஆர். அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கு மீண்டும் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி.

பிரதமர் மோடி

அதைத் தொடர்ந்து காந்தி, நேரு பரிந்துரையின்படி அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவராக நியமித்து இன்றைக்கு 75 ஆண்டுகளாக இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதுகாத்து வருகிற அரசமைப்புச் சட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மூலமாக அரசியல் நிர்ணய சபை நாட்டு மக்களுக்கு வழங்கியது. இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ் கட்சியினரின் ஒத்துழைப்பு தான் காரணம் என்று பி.ஆர். அம்பேத்கர் பாராட்டியதை பிரதமர் மோடிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியா என்பது வடஇந்தியா மட்டுமல்ல என்று தமிழக அமைச்சர் பேசியதாக குற்றச்சாட்டை பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மத்திய பா.ஜ.க. அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதாமல் திட்டங்களை தீட்டுவதிலும், நிதிகளை ஒதுக்குவதிலும் மாநிலங்களுக்கிடையே அப்பட்டமான பாரபட்சத்தை பா.ஜ.க. கடைப்பிடிப்பதை கண்டிக்கும் விதத்தில் தான் திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் அப்படி கருத்து கூறியிருக்கிறார். உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதியையும், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுகிற நிதியையும் ஒப்பிட்டால் ஒன்றிய பா.ஜ.க. அரசு எவ்வளவு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பாஜக மோடி

வடகிழக்கு மாநிலங்களை நேரு புறக்கணித்தார் என்று ஒரு அவதூறான கருத்தை பிரதமர் மோடி பேசியிருக்கிறார். நேரு பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு 1937 இல் அசாமில் 8 நாள்கள் தங்கியிருந்து வடகிழக்கு மாகாணத்தில் வாழ்கிற நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை நேரில் ஆய்வு செய்து அவர்களின் தனித்தன்மையையும், நில உரிமைகளையும் பாதுகாக்க தீவிரமான கருத்துகளை அன்றைக்கே வெளிப்படுத்தியவர் நேரு. 1962-ம் ஆண்டு 13-வது அரசமைப்புச் சட்ட திருத்தத்தின்படி நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவித்தவர் நேரு.

வடகிழக்கில் உள்ள 7 மாகாணங்கள் மீது, அங்கு வாழ்கிற பழங்குடியின மக்கள் மீது, அவர்களது பண்பாடு, கலாசாரத்தை மதித்து நேரு போற்றியதைப் போல வேறு எந்த பிரதமரும் செய்ததில்லை. அதைச் சிறுமைப்படுத்துகிற வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலின் தொடர்ச்சியாகத் தான் மணிப்பூர் மாநிலம் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறது. குக்கி பழங்குடி மக்களும், சமவெளியில் வாழ்கிற மைதேயி மக்களும் எந்த காலத்திலும் இணைந்து வாழ முடியாத நிலையை பா.ஜ.க. உருவாக்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் – மணிப்பூர் வன்முறை

பிரேன் சிங் தலைமையிலான ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்ததனால் உச்ச நீதிமன்றம் கலவரம் தொடர்பான விசாரணை நடத்த வெளி மாநிலத்தை சென்ற 3 பேர் கொண்ட பெண் நீதிபதி குழுவை அமைத்திருக்கிறது. மணிப்பூர் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உச்ச நீதிமன்றத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டிருக்கின்றன. 11 வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

விசாரணையை கண்காணிக்க முன்னாள் மகாராஷ்டிர மாநில டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பதிவு செய்த வழக்குகளை ஆய்வு செய்ய 42 புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வெளி மாநில டி.ஐ.ஜி.க்கள் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கிறது. மோடி அரசால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்காது என்ற காரணத்தினால் தான் உச்ச நீதிமன்றம் நேரடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதைவிட பிரதமர் மோடிக்கு வேறு அவமானம் இருக்க முடியாது.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

கடந்த 20 நாள்களாக நடைபெறுகிற பாராளுமன்ற கூட்டத்திற்கு வராத மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசுவதற்கு வந்ததே மிகப்பெரிய ஜனநாயக கடமையாகக் கருதுவதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய அவமதிப்பாகும். அவைக்கு வர விரும்பாதது பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத உணர்வும், பாசிச, சர்வாதிகார போக்கும்தான் வெளிப்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடாக அமையும் என்று கூற விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.