பிரதமர் மோடியின் பதிலுரையில் தெரிந்தது விரக்தியா, சமாளிப்பா, நம்பிக்கையா?! – ஓர் அலசல்

மத்தியில் இருக்கும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் கொண்டுவந்தனர். அதன்மீது விவாதங்கள் நடைபெற்று, நேற்று (ஆக.10) பிரதமர் மோடி பதிலுரை அளித்தார்.

மணிப்பூர்
வன்முறை

மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் பிரச்னையை முன்வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்கும் நிலையில், பிரதமரின் இரண்டே கால் மணி நேர உரையில், மணிப்பூர் பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

இனமோதல் காரணமாக மணிப்பூரில் நிகழ்ந்த கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சொந்த நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இருக்கும் துயரங்கள் போன்றவை பற்றியெல்லாம் மோடி பேசவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இவை பற்றியெல்லாம் பேசவில்லை என்றால், அந்த இரண்டே கால் மணி நேரத்தில், காங்கிரஸ் கட்சியைத் தாக்குவதிலேயே பிரதமர் அதிக கவனம் செலுத்தினார்.

பிரதமர் மோடி

மணிப்பூர் பிரச்னையைப் பற்றி பேசுவதற்கு அவருக்குத் தயக்கம் இருந்திருக்கலாம். ஏனென்றால், பல கொடூரங்கள் நிகழ்ந்தும் அந்த மாநிலத்துக்கு இதுவரை அவர் செல்லவில்லை. எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியும், ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்.பி-க்களும் மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டு வந்துவிட்டனர். ஆனால், பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை. மணிப்பூர் விவகாரம் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவாகப் பேசியிருக்கிறார் என்பதைச் சொல்லி, மணிப்பூரை கடந்துசென்றுவிட்டார் பிரதமர் மோடி.

“இதேபோல, 2018-ம் ஆண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள். அது எங்களுக்கு மங்களகரமாக அமைந்தது. 2019 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம். அதுபோல இப்போது கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் எங்களுக்கு மங்களகரமாக அமையும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறுவோம். மூன்றாவது முறையாக ஆட்சியமைப்போம்” என்று பேசினார் பிரதமர் மோடி.

மணிப்பூர்

நாடாளுமன்றத்துக்கு வராமல் இருந்த பிரதமர் மோடியை, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் வரவழைத்துவிட்டன. அந்த கோபம் பிரதமருக்கு இருக்கலாம். காங்கிரஸை ‘ஆணவம் நிறைந்த கட்சி’ என்றெல்லாம் சாடினார் பிரதமர். ‘தேசியக்கொடியிலிருந்து மூவர்ணத்தை எடுத்துக்கொண்டது, காந்தி பெயரையும் திருடிக்கொண்டது’ என்கிறார் பிரதமர். அதற்கு, ‘காந்தியைக் கொலைசெய்தவர்களை ஆதரிக்கும் நீங்கள் காந்தி பற்றி பேசலாமா?’ என்று பதிலடி கொடுக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

‘எதிர்க்கட்சிகளுக்கு என்மீது பாசம் அதிகம். அது எந்த அளவுக்கு என்றால், நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது தண்ணீர் குடித்தால்கூட அதை பிரச்னையாக்குவார்கள். 24 மணி நேரமும் மோடியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்‘ என்றார் பிரதமர் மோடி. மோடியைப் பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம் இருக்கிறதா, அல்லது எதிர்க்கட்சிகளைப் பார்த்து மோடிக்கு பயம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பதையும், ‘இந்தியா’ என்று கூட்டணிக்கு பெயர் வைத்திருப்பதையும் கண்டு பா.ஜ.க-வுக்கும் மோடிக்கும் பயம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சியினரும், அரசியல் பார்வையாளர்களும் கூறுகிறார்கள்.

ராகுல் காந்தி

ஏனெனில், ‘கூட்டணியின் பெயரை மாற்றினால், ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள். இந்தியா என்று பெயர் வைத்ததன் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெங்களூருவில் இறுதிச்சடங்கு செய்துவிட்டனர்’ என்றெல்லாம் கடுமையாக மோடி பேசியிருக்கிறார். இது, அவரது விரக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா என இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமடைந்திருப்பது பிரதமருக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.