1994-ல் வெளிவந்த திரைப்படம் ‘மகளிர் மட்டும்’. பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றி உரையாடிய ‘மீ டூ’ இயக்கம் இங்கு பிரபலமாவதற்கு முன்பே அந்தப் பிரச்னையைப் பேசிய படம். 1980-ல் வெளியான ‘Nine to Five’ என்கிற ஆங்கிலப்படத்தின் தழுவல்.
அதுவரை வசனம் மட்டும் எழுதிக் கொண்டிருந்த கிரேஸி மோகன், கமலுடன் இணைந்து திரைக்கதையையும் எழுதினார். படத்தினுள் வந்த ‘டெட்பாடி’ தொடர்பான காமெடி காட்சிகள், அவருடைய நாடகத்தில் ஏற்கெனவே இருந்த சமாச்சாரம்தான்.
பணியிடங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல் என்பது சீரியஸான விஷயம். ஆனால் அதன் தீவிரம் சற்றும் குறையாமல் சிரிக்கச் சிரிக்கப் பேசிய படம் இது. ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகிய மூவருமே அவரவர்களின் பாத்திரங்களில் அட்டகாசம் செய்தார்கள். அதுவரை சீரியஸ் ரோல்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நாசர், முதன் முதலில் ‘சில்மிஷ நாயகனாக’ காமெடியும் செய்த படம் இது.
கமலுடைய தயாரிப்பு என்றாலும் இறுதிக் காட்சியில் மட்டும் அவர் வந்து போனார். மற்றபடி இது பெண்களின் ராஜாங்கம்தான். தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அவர்களே எப்படித் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பது நகைச்சுவை பெருகி வழியும்படியாகச் சொல்லப்பட்டிருந்தது.
முன்னணி ஹீரோ கிடையாது. ஆக்ஷன் காட்சிகள் கிடையாது. மசாலா படமுமில்லை. ‘இந்தப் படம் ஓடுமா’ என்று சந்தேகம் எழுப்பியவர்களின் வாயை அடைப்பது போல பல அரங்குகளில் 175 நாள்களுக்கும் மேலாக ஓடி வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. ஊர்வசியின் நடிப்பிற்குப் பரவலான பாராட்டும் தமிழக அரசு விருதும் கிடைத்தது.
ஹீரோ இல்லாமல் ‘ஹீரோயின்கள்’ சாதித்துக் காட்டிய படம்
சத்யா, ஜானகி, பாப்பம்மா ஆகிய மூன்று பெண்களும் வெவ்வேறு வர்க்க சூழலில் இருந்தாலும் அவர்களை இணைப்பது அலுவலகம். ஒரு கார்மெண்ட் ஃபாக்டரியில் பணிபுரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பிரச்னைகள். தனித்தனியாக இருந்தாலும் பெண்களின் ஆதாரமான பிரச்னைகளை பொதுமைப்படுத்தி விடலாம். ஒருவருக்கு வரதட்சணைப் பிரச்னை. இன்னொருவருக்கு வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் கணவர் பிரச்னை. மற்றவருக்கு குடிகார கணவனால் பிரச்னை. ஆனால் இவற்றையெல்லாம் விட ஒரு பெரிய பிரச்னை அவர்களுக்கு அலுவலகத்தில் இருக்கிறது. அது மேனேஜர் பாண்டியன். பயங்கரமான சபலப் பேர்வழி. இந்த விஷயத்தில் அவர் வர்க்க பேதமெல்லாம் பார்ப்பதில்லை. சேலை கட்டியிருந்தால் கூட போதும். ஜெராக்ஸ் மெஷினைக் கூட வெறித்துப் பார்க்கும் அளவிற்கு ‘கன்னா பின்னா’ பெண் பித்தன்.
ஜானகியும் பாப்பம்மாவும் ‘மூக்கன்’ என்று அடைமொழியால் அழைக்கப்படுகிற மேனேஜரின் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் போது அலுவலகத்திற்கு புதிதாக வருகிற சத்யா, இந்தப் பிரச்னையைத் துணிச்சலாக எதிர்கொள்வதோடு மற்ற இருவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கிறார். எனவே மூவரும் நெருக்கமான தோழிகளாகிறார்கள். இந்தச் சூழலில் மேனேஜர் சேரில் இருந்து கீழே விழுந்து மயக்கமாகி விடுகிறார். சர்க்கரைக்குப் பதிலாக எலி மருந்தை தான் தவறுதலாக கலந்து கொடுத்ததால் மேனேஜர் இறந்து விட்டதாக ஜானகி அச்சப்படுகிறார். அவரைத் தேற்றும் மற்ற இரு தோழிகளும் ‘இந்தப் பிரச்னையிலிருந்து எப்படித் தப்பிப்பது?’ என்று யோசிக்கிறார்கள். பிறகு நடக்கிறது ஒரு ரகளையான நகைச்சுவைத் திருவிழா.
இறுதியில் நிறுவன முதலாளியின் மூலம் மேனேஜரின் சுயரூபம் அம்பலமாகிறது. மூன்று பெண்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். சுபம்.
ரேவதி, ஊர்வசி, ரோகிணி – நடிப்பில் அசத்திய பெண்கள்
‘மல்ட்டிபெக்ஸ் தியேட்டர்களுக்காக’ உருவாக்கப்படும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் இரண்டாயிரத்திற்குப் பிறகுதான் இந்தியாவில் பிரபலமாகின. ஆனால் தொண்ணூறுகளின் காலகட்டத்திலேயே இப்படியொரு ஐடியாவை யோசித்து செயலாக்கிய தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு பிரத்யேக பாராட்டு. பெரிய ஹீரோ என்று யாருமில்லாமல் பெண்களைப் பிரதான பாத்திரங்களாக ஆக்கி, அவர்களின் பிரச்னையைப் பேச வைத்து வெற்றியடைய வைத்ததற்காக இந்தப் படத்தின் குழுவை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஒரு திரைப்படத்தின் கதையும் திரைக்கதையும் மிக முக்கியம் என்றால் அதற்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்தது `Casting’. எழுத்தில் இருந்த விஷயங்களுக்கு அவர்கள்தான் தங்களின் நடிப்பின் மூலம் உயிர் தரப் போகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் நடிகர் தேர்வு அட்டகாசமாக இருக்கிறது. ‘நிஜ வாழ்க்கையிலும் தோழிகளாக இருக்கிறவர்கள், இந்தப் படத்திற்காக தேர்வு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்’ என்று இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் கருதினாராம்.
அதன்படி சத்யா என்கிற துணிச்சலான பெண் பாத்திரத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டார் ரேவதி. ஊர்வசிக்கோ ‘பாப்பம்மா’ பாத்திரத்தின் மீது ஒரு கண். மெட்ராஸ் பாஷையில் பேசி வெளுத்துக் கட்டலாம் என்பது அவரது ஆசை. ஆனால் அவரது தோற்றம், ஜானகி என்கிற வெகுளியான பாத்திரத்திற்குத்தான் பொருத்தம் என்பதால் ஒப்புக் கொண்டார். ‘பாப்பம்மா’ கேரக்ட்டருக்கு யாரைப் போடலாம் என்று தீவிர ஆலோசனை நடக்க, ரோகிணியின் பெயரை முன்மொழிந்தவர் கமல். மூன்று பெண்களைத் தாண்டி இன்னொரு முக்கிய பாத்திரம் மேனேஜர் பாண்டியன். இதற்கு நாசரின் பெயரை கமல் சொல்ல ‘அவர் சீரியஸ் ரோல்ல நடிக்கறவரு. எடுபடுமா?’ என்று கிரேஸி மோகன் சந்தேகம் எழுப்ப, ‘அதெல்லாம் நல்லா வரும்’ என்று ஊக்கம் தந்தவர் கமல்.
‘மூக்கன்’ பாத்திரத்தில் அசத்திய நாசர்
சபலம் கொண்ட பாத்திரத்தில் நாசர் வெளுத்து வாங்கி, பெண் பார்வையாளர்களின் வயிற்றெரிச்சலை நன்றாக வாங்கிக் கொண்டார். தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்த ஒட்டுமொத்த ஆண்களையும் நாசர் கேரக்டரின் வழியாக பெண்கள் பார்த்திருப்பார்கள். அப்படியொரு ரகளையான நடிப்பு. பெண் பாத்திரங்களின் அவமதிப்புகளையும் ஏற்றுக் கொண்டு, பார்வையாளர்களின் கோபத்தையும் கூடவே சம்பாதிக்கிற கேரக்ட்டர் என்றால் பொதுவாக எந்தவொரு ஆண் நடிகருமே ஏற்கத் தயங்குவார்கள். ஆனால் நடிப்பென்று வந்துவிட்டால் அதற்கேற்ற தீனியைக் கொலைப்பசியுடன் தேடுகிற நாசருக்கு தயக்கம் ஏதுமில்லை. ஒவ்வொரு பெண்ணிடமும் அதிகாரமும் கெஞ்சலுமாக வழிவது, முரட்டு அதிகாரம் செய்வது, மாட்டிக் கொள்ள நேரும் போது கீழே விழுந்து சமாளிப்பது என்று மூன்று பெண்களின் அபாரமான நடிப்பிற்கும் சளைப்பில்லாமல் ஈடு கொடுத்தார்.
மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களுக்கும் அவர்களுக்குப் பொருத்தமான தோற்றம், பின்னணி, உடல்மொழி, வசனம் போன்றவைத் தரப்பட்டிருக்கின்றன. சத்யாவாக நடித்திருக்கும் ரேவதி துணிச்சல் கொண்டவர். அதிகமாக வரதட்சணை கேட்கும் மாப்பிள்ளை வீட்டாரிடம் “சரி… நீங்க கேட்டதெல்லாம் தரோம். ஆனா மாப்பிள்ளைக்கு நான்தான் தாலி கட்டுவேன். சம்மதமா?” என்று கேட்டு அதிர வைக்கும் கேரக்டர்.
பணியிடங்களில் பெண்கள் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதற்கு முதல் காரணம் அவர்களுக்குள் இருக்கும் அச்சம்தான். மேலதிகாரி தன்னைப் பழி வாங்கி விடுவாரோ, வேலை போய்விடுமோ, வெளியில் சொன்னால் தன்னைத்தான் தவறாக நினைப்பார்களோ என்றெல்லாம் பல்வேறு விதமாக குழம்புவதை சபலக்கார ஆண்கள் சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். தங்களின் அதிகாரம், செல்வாக்கு, பணம் போன்றவற்றின் மூலம் ஆசை காட்டியோ, மிரட்டியோ, கெஞ்சியோ தங்களின் காரியத்தைச் சாதிக்க நினைக்கிறார்கள்.
இதற்கான தீர்வு ரேவதி வரும் ஆரம்பக் காட்சியிலேயே காட்டப்பட்டிருக்கிறது. மற்ற பெண்களிடம் அணுகுவது போலவே ரேவதிக்குப் புதிய பட்டுப்புடவையை மேலாளர் வாங்கித் தருவார். அதைத் தருவதற்கு முன் அறையின் ஜன்னல் கதவுகளை மூடி விடுவார். ஆனால் அந்தப் புடவையை கறாராக வாங்க மறுக்கும் ரேவதி, “எனக்குப் புடவை எடுத்துத் தரணும்னா ஒண்ணு அப்பாவா இருக்கணும்… இல்லன்னா, கணவனா இருக்கணும். நீங்க யாரு… ஜன்னலை உடனே திறக்கலைன்னா அவமானப்படுத்த வேண்டியிருக்கும்” என்று துணிச்சலாகச் சொன்னவுடன் நாசர் வெலவெலத்துப் போய் விடுவார். அதிலிருந்து ரேவதியிடம் வாலாட்ட மாட்டார்.
ஊர்வசி பிராமண சமூகத்தைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண். தன்னுடைய குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குச் செல்ல விருப்பமில்லாதவர். ஆனால் யூனியன் பிரச்னை காரணமாக கணவர் வீட்டில் இருப்பதால் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். மேனேஜரின் பாலியல் சீண்டலை எப்படித் தவிர்ப்பது என்று தவியாகத் தவிக்கிறார். மற்றவர்களிடம் உபதேசம் கேட்கிறார். அச்சமும் குழப்பமும் கொண்ட ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் குணாதிசயத்தை ஊர்வசி மிகத் திறமையாக நடித்துக் காண்பித்திருக்கிறார். நெருக்கடி மிகுந்த நேரத்தில் தத்துப் பித்தென்று கேள்வி கேட்பது, உளறிக் கொட்டுவது, சொதப்புவது, மிகையாக அச்சப்படுவது என்று படத்தின் நகைச்சுவைக்கு ஊர்வசியின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது.
அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக, மெட்ராஸ் பாஷை பேசும் பாத்திரத்தில் ‘நச்’சென்று பொருந்தியிருந்தார் ரோகிணி. ‘இப்ப இன்னான்ற’ என்று எகத்தாளமாகப் பேசினாலும் ‘மூக்கனின்’ சில்மிஷத்தில் மாட்டும் போது திணறித்தான் போய் விடுகிறார். ரேவதி மற்றும் ஊர்வசிக்கும் நிகராக நடிப்பைக் கொட்டி அசத்தினார். பேருந்தில் நாகேஷின் பிணத்தை எடுத்துச் செல்லும் போது கண்டக்டர் ‘டிக்கெட்’ என்று கேட்க ‘அவரு எப்பவோ டிக்கெட் வாங்கிட்டாரு’ என்று ரோகிணி சட்டென்று சொல்லும் போது திரையரங்கமே அதிர்ந்திருக்கும்.
பிணமாக வந்து நடிப்பிற்கு உயிர் தந்த நாகேஷ்
கமல் படம் என்றால் நாகேஷ் இல்லாமலா? டைமிங்கான வசனத்திற்குப் பெயர் போன நாகேஷிற்கு இதில் ஒரு வசனம் கூட கிடையாது. ஆம், பிணமாக நடித்தே பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். குடிபோதையில் பிணம் என்று அறியாமல் நாகேஷூடன் தலைவாசல் ‘விஜய்’ விழுந்து புரண்டு சண்டையிடும் காட்சியைப் படமாக்கியிருக்கும் விதம் அருமை. ‘இப்பல்லாம் டெக்னாலஜி எங்கயோ போயிடுச்சுல்ல’ என்று பைல்ஸ் நோயாளியாக வரும் ஆர்.எஸ்.சிவாஜி புன்னகைக்க வைக்கிறார். ‘பசி’ சத்யாவை எப்போதும் அடித்தட்டு பாத்திரத்திலேயே நடிக்க வைப்பார்கள். இதில் ஆறுதலாக நவீன தோற்றம். மற்றவர்களைப் பற்றி மேனேஜரிடம் போட்டுக் கொடுக்கும் ‘ஆள்காட்டி’ கேரக்டர்.
நல்ல தமிழில் பேசுபவராக தயாரிப்பாளர் தாணு சில காட்சிகளில் நடித்தார். அவர் நடித்த ஒரே திரைப்படம் இதுதான். காது கேட்காத கிழவராக ஒரு கேரக்ட்டர் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து இருக்கும். கடைசிக்காட்சியில் அதன் சஸ்பென்ஸ் அவிழ்கிறது. இனிய ஆச்சரியமாக க்ளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் வந்து சுபமான முடிவைத் தருவார்.
பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த திருநாவுக்கரசு முதன் முதலில் ஒளிப்பதிவு செய்த திரைப்படம் இது. கார்மெண்ட் பாக்டரி, ஆஸ்பிட்டல் என்று ஒரே மாதிரியான இடங்கள் வந்தாலும் தனது வித்தியாசமான ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கினார். இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தன. எம்.பி.ஸ்ரீனிவாசனின் சேர்ந்திசை பாணியில் ‘மகளிர் மட்டும்’ என்கிற டைட்டில் பாடலை அமைத்திருந்தார் ராஜா. ஒரே பாடலில் பல்வேறு குரல்களைத் தந்து அசத்தியிருந்தார் எஸ்.ஜானகி.
‘கறவை மாடு மூணு’ பாடலின் வரிகள் ஆட்சேபத்திற்கு உரியதாக இருப்பதாகக் கருதிய ஊர்வசி அதில் நடிக்க மறுக்க, கவிஞர் வாலி விளக்கம் அளித்தபின் ஒப்புக் கொண்டார். இந்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொண்டு ‘டேக் இட் ஈசி ஊர்வசி’ என்று இன்னொரு பாடலுக்கு எழுதும் போது ஊர்வசியின் பெயரைப் போட்டது வாலியின் பிரத்யேக குறும்பு.
தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுநராக பேருந்தில் பணியமர்த்தப்பட்ட ‘எம். வசந்தகுமாரி’ பற்றி அப்போது ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அவரையும் படத்தில் இணைத்துக் கொண்டது புத்திசாலித்தனம். (கமல் கார் வாங்கித் தந்தாரா என்பது பற்றித் தெரியவில்லை). பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் தவிர, பணியிடங்களில் ‘குழந்தைகள் டே கேர்’ அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை படம் போகிற போக்கில் உணர்த்தியது.
ரேவதி, ஊர்வசி, ரோகிணி, நாசர் ஆகியோரின் அட்டகாசமான நடிப்பு, கிரேஸி மோகனின் டைமிங் நகைச்சுவை வசனங்கள், சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் திறமையான இயக்கம், இளையராஜாவின் இசை போன்ற காரணங்களால், ‘மகளிர் மட்டுமல்ல’, ஆண்களும் கூட ரசித்துப் பார்க்கும் அளவில் இருக்கிறது, இந்தத் திரைப்படம்.