கேரள மாநிலத்தின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி சென்று வழிபட்டு வருவது வழக்கம். கடந்த 2021-ம் ஆண்டு குருவாயூர் கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் தன் எடைக்கு எடை சர்க்கரை மற்றும் கோயிலின் மணிக்கிணற்றில் உள்ள தீர்த்தமும் துலாபாரம் நேர்ச்சையாகச் செலுத்தினார்.
துலாபாரம் நேர்ச்சைக்காக குருவாயூர் கோயில் கவுண்டரில் 9,200 ரூபாய் துர்கா ஸ்டாலின் சார்பில் செலுத்தப்பட்டது. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள சுற்று விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. அதற்காக குருவாயூர் கோயிலுக்கு 40,000 ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் குருவாயூர் கிருஷ்ணனுக்கு தங்க கீரிடம் காணிக்கை வழங்குவதாக துர்கா ஸ்டாலின் ஏற்கனவே முடிவு செய்திருந்தாராம். அதற்காக ஏற்கனவே மூலவர் கிருஷ்ணரின் கிரீட அளவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து 32 பவுன் அளவில் குருவாயூர் கிருஷ்ணருக்கு தங்க கிரீடம் தயாரிக்கப்பட்டது. 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலில் சமர்ப்பித்தார்.
நேற்று மதியம் கோயிலில் பூஜைகள் நடந்த சமயத்தில் வழிபட்ட துர்கா ஸ்டாலின், கிரீடம் மற்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தணம் அரைக்கும் இயந்திரம் ஒன்றையும் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். குருவாயூர் கோயிலில் சந்தணம் அரைப்பதற்கான இயந்திரங்கள் உள்ளன. அந்த இயந்திரத்தில் அரைத்ததுபோக சிறிதளவு சந்தணக்கட்டை மிஞ்சும். தோயா என அழைக்கப்படும் அந்த சிறு சந்தண கட்டைளை அரைக்க எந்த வழியும் இல்லாமல் இருந்தது. குருவாயூர் கோயிலுக்கு தேவையான சந்தணம் ஒரு கிலோ 17 ஆயிரம் ரூபாய்க்கு வனத்துறை மூலம் வாங்கப்படுகிறது. அதில் மீதம் வரும் துண்டு கட்டைகள் கிலோ ஆயிரம் ரூபாய்க்குத்தான் வனத்துறை திரும்ப வாங்குகிறது. அது குருவாயூர் தேவசம்போர்டுக்கு நஷ்டமாக இருந்தது. எனவே மீதம்வரும் சந்தணத்துண்டுகளை தேவசம்போர்டு வைத்துள்ளது.
வனத்துறையை தவிர வேறு யாருக்கும் அந்த சந்தண கட்டைகளை தேவசம்போர்டால் விற்க முடியாது. இதற்கு தீர்வு ஏற்படும் விதமாக சிறு சந்தண கட்டைகளை அரைக்கும் இயந்திரத்தை துர்க்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலுக்கு வழங்கி உள்ளார். கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணி நட்சத்திர நாளில் துர்கா ஸ்டாலின் குருவாயூரப்பனுக்கு தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கியுள்ளார்.