அடர்ந்த காடுகள், நகர்ப் புறங்கள், கிராமப் பகுதிகள், கடலுக்கு அடியில் உள்ள பகுதிகள், சதுப்பு நிலங்கள் போன்ற பல்வேறுபட்ட பகுதிகளில் இயங்கும் சூழல் மண்டலங்கள் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் முற்றிலும் புதிய தளம் பற்றி அறிய உள்ளோம். அதாவது, கடற்கரைகளில் செயல்படும் சூழல் மண்டலங்களின் சில முக்கிய அங்கங்கள் குறித்து பார்க்கலாம்.. குறிப்பாக கடற்கரையின் முக்கியத்துவம் மிகுந்த நண்டுகள் குறித்து காண்போம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/crab_8.jpg)
கடற்கரை என்பது பெரும் நீர் பரப்பாகிய கடலையும் நிலத்தையும் இணைக்கும் புள்ளியாகும். இங்கே இயங்கும் சூழல் மண்டலங்கள் நீரையும் நிலத்தையும் இணைப்பதோடு மட்டுமல்லாமல் சில சிறப்பு அம்சங்களையும் கொண்டவை. அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு தலமாக விளங்கும் கடற்கரையில் நிலத்தின் மேலேயும் நிலத்தடியிலும் பல உயிர் சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பிரம்மாண்டமான வானத்தையும் கடலையும் தொட்டுக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த கடற்கரையில் நண்டுகள் போன்ற ஒரு சிறிய உயிரினம் இங்குள்ள உணவுச் சங்கிலியையும் ஆற்றல் ஓட்டத்தையும் இயக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாம் கடற்கரையில் தினமும் சந்திக்கும் நண்டுகள் எனப்படும் பா நண்டுகள் குறித்தும் சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு என்ன என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/crab_1.jpg)
பா நண்டு, கருவாலி நண்டு, குழி நண்டு என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் கடற்கரையின் நண்டுகள், நாம் தினமும் கடற்கரையில் சந்திக்கும் ஒரு உயிரினம். ஆங்கிலத்தில் கோஸ்ட் கிராப் (Ghost crab) என அழைக்கப்படும் இவை, இரவில் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்குகின்றன. அதன் காரணமாகவே அவற்றுக்கு கோஸ்ட் கிராப் என்ற பெயர் உண்டாயிற்று.
கோஸ்ட் கிராப் எனப்படும் நண்டுகள் பொதுவாக வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல கடலோரப் பகுதிகளில் காணப்படும். கடற்கரையில் உள்ள முதுகெலும்பிலிகளில் (Invertebrates) உருவ அளவில் மிகப்பெரியது இந்த வகை நண்டுகளே. இவற்றின் வெளித்தோற்றத்தில் மிகமுக்கிய அம்சம் என்னவென்றால் அதன் கொம்பு போன்ற இரு கண்கள். அந்த கொம்பு கண்களின் உதவியால் 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். தேவைப்படும்போது அந்தக் கொம்புகளை எந்தத் திசையில் வேண்டுமானாலும் சுழற்றவும் முடியும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/crab_2.jpg)
கடற்கரையில் வாழும் ஓடுடைய கணுக்காலிகளில் (Coelenterates) மிகவும் வேகமாக இயங்கவல்லது பா நண்டுகளே. புரிதலுக்காகச் சொல்ல வேண்டுமானால் இவற்றை, மிகவும் கடினமான ஓட்டை தமது புறவன் கூடாக கொண்ட கணுக்காலிகள், ஓடுடைய கணுக்காலிகள் என்று வகைப்படுத்த முடியும். இவற்றில் நண்டு, நத்தை, இறால் போன்றவையும் அடக்கம். பா நண்டுகளால் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.
பா நண்டுகளால் வேகமாக ஓடமுடியும் என்பதோடு மட்டுமல்லாமல் கூர்மையான பார்வையும் கொண்டவையாக இருப்பதால் கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவிலேயே எதிரியைப் பார்த்துவிடும். இது தன்னைத் தானே தற்காத்துக் கொள்வதற்கு மட்டும் அல்லாமல் இத்தகைய திறமைகளால் அவற்றால் சிறந்த வேட்டையாடியாகவும் விளங்க முடிகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/crab_3.jpg)
இவை, அனைத்துண்ணிகள். எனவே அவை ஆமைகள், கடற்கரை வாழ் பறவைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளைப் பிடித்து உண்ணும். சில நேரங்களில் தன்னுடைய இனத்திலேயே மற்றொரு பலவீனமான நண்டை பிடித்து உண்பதும் (Cannibalism) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா நண்டுகள் தன்னையே பாதுகாத்துக் கொள்வதற்காக பல வித்தைகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று, பகல் முழுவதும் கடற்கரையில் பொந்துகளில் பதுங்கி வாழ்வது. கிட்டத்தட்ட 6 முதல் 12 மீட்டர் ஆழத்துக்கு அவற்றின் பொந்துகள் இருப்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. ஒவ்வொரு நண்டும் தான் உருவாக்கிய பொந்தில் தனியாகவே வாழும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/crab_7.jpg)
பொந்துகளில் பதுங்கி இருப்பதால் வெளி உலகின் சீதோஷ்ண நிலையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. அத்துடன், எதிரிகளிடமிருந்தும் அவற்றுக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்கிறது. ஊரே உறங்கிய பின்னர், அனைத்து உயிரினங்களும் தங்கள் இயக்கத்தை நிறுத்திய இரவு நேரத்தில் பா நண்டுகள் அந்தப் பொந்துகளை விட்டு வெளியே வருகின்றன.
பா நண்டுகளிடம் இருக்கும் மற்றொரு வித்தை, கடற்கரையில் உள்ள மணலின் வண்ணத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய உடலின் நிறத்தை மாற்றிக்கொண்டு உருமறைப்பு செய்துகொள்ளும். மேலும் இவற்றுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் மற்றும் செவுள்கள் இருப்பதால் காற்றிலும் நீரிலும் சுவாசிக்க முடிகிறது. ஆகவே எதிரி பிடிக்க முயலும்போது சட்டென்று நீரில் மறைந்து தப்பிக்கவும் முடிகிறது. பா நண்டுகள் கடற்கரையோரங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு உணவாக விளங்குவதோடு அவர்களால் பருவநிலை மாற்றத்தைச் சரியாகக் கணிக்கவும் பேருதவி புரிகின்றன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/crab_4.jpg)
நண்டுகள் பதுங்கிக் கொள்வதற்கான பொந்துகளை அமைக்கும்போது, மணலைத் தோண்டி தூரத்தில் வீசினால் அன்றைய வானிலை அமைதியாக இருக்கப் போவதாக மீனவர்கள் கருதுகிறார்கள். அதே சமயம் அவை அருகிலேயே மணலை போடுவதோ அல்லது நாள்முழுவதும் பொந்துகளில் இருந்து வெளியே வராமல் உள்ளேயே அடைபட்டுக் கிடந்தாலோ, வானிலை சீற்றத்துடன் காணப்படும் என்று உள்ளூர் மக்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப தாங்கள் கடலுக்குள் செல்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறார்கள்.
பா நண்டுகள் கடற்கரையின் பாறு கழுகுகள் என அழைக்கப்படுகின்றன. இறந்த உயிரினங்களை உண்டு வாழும் பாறு கழுகுகள், நிலத்தின் தோட்டி உயிரினங்கள் (Scavengers). என்றால், பா நண்டுகள் கடற்கரையில் சுத்திகரிப்புப் பணியைச் செய்கின்றன. கடற்கரையில் இறந்த உயிரினங்களால் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் அவற்றை தங்களின் உணவுக்காக உண்கின்றன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/crab_6.jpg)
கடலுக்கும் நிலப்பரப்புக்கும் இடையே ஆற்றல் சுழற்சியும் தாதுகளின் சுழற்சியும் நடைபெறுவதற்கு முக்கிய பங்காற்றுவது இந்த வகை நண்டுகளே. இவ்வாறு சூழலியல் ரீதியாக கடலையும் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் பா நண்டுகள் பல்லுயிர் ஆதார உயிரினமாகப் பார்க்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி இவை பொந்து அமைத்து வாழும் தன்மை கொண்டதால், மண்புழுக்களைப் போல மண்ணின் வெவ்வேறு படிமங்களை சுழற்சி செய்வதிலும், அவற்றை புழு, நத்தை போன்ற உயிரினங்கள் வாழத்தகுந்த இடமாக உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பா நண்டுகளைப் பொறுத்த வரையிலும், கடற்கரைப் பகுதிகள் மனிதர்களால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறதா என்பதை ’சுட்டிக்காட்டும் உயிரினமாக’ (Indicator species) விளங்குகின்றன. அதாவது ஒரு கடற்கரையில் பா நண்டுகளோ அவற்றின் பொந்துகளோ அதிகமான அளவில் காணப்பட்டால், மனிதர்களாலும் மனிதர்களின் வளர்ச்சியாலும் ஏற்படக்கூடிய பாதிப்பு அல்லது தாக்கம் அந்தக் கடற்கரையில் மிகவும் குறைவு என அறிந்து கொள்ளலாம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/crab_5.jpg)
எனவே அடுத்த முறை கடற்கரைக்குச் செல்லும்போது பா நண்டுகள் அல்லது அவற்றின் பொந்துகளை பார்க்க முடியாவிட்டால், நம்முடைய வாழ்க்கை முறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்றும் நம்முடைய சூழலியல் சார்ந்த பொறுப்புணர்வையும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதையும் உணர்ந்து செயல்படுவோம்.
இரவு வாழ்க்கை நடத்தும் நண்டுகள் போன்று வித்தியாசமான வாழ்க்கை வாழும் வேறு சில உயிரினங்கள் குறித்து அடுத்து காண்போம்..