வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான மசோதாக்களை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
பிறகு அவர் பேசுகையில், 1860 முதல் 2023 வரை நாட்டின் கிரிமினல் நீதி அமைப்பு, ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டங்களின்படி இயங்கியது. இன்று நான் முன் வைக்கும் மூன்று மசோதாக்களில் குற்றவியல் நீதி அமைப்புக்கான கொள்கைச் சட்டமும் அடங்கும். ஒன்று 1860ல் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், இரண்டாவது 1898ல் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், மூன்றாவது 1872ல் உருவாக்கப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம்.
ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவோம். பழைய 3 சட்டங்கள் மாற்றப்படும். இதன் மூலம், கிரிமினல் நீதி அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்திய தண்டனைச் சட்டம்,1860க்கு மாற்றாக பாரதிய நியாய ஷன்ஹிதா 2023 கொண்டு வரப்படுகிறது. பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா 2023 மசோதாவானது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு மாற்றாக இருக்கும். பாரதிய சக்ஷியா மசோதா 2023 ஆனது இந்திய சாட்சிகள் சட்டம் 1872க்கு மாற்றாக அமையும். ஆங்கிலேயர்களை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்கள் நீக்கப்படும்.
இந்த மசோதாக்கள் ஆனது, கிரிமினல் நீதி அமைப்பில் மாற்றம் கொண்டு வரும். இந்த மசோதாக்கள் பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பழைய சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால், புதிய சட்டத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த மசோதா மூலம், தண்டனை விகிதம் 90 சதவீதத்திற்கு மேல் கிடைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 7 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் குற்றங்களில் சம்பவ இடத்திற்கு தடயவியல் துறையினர் சென்று சோதனை நடத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய சட்டங்களின்படி, தேச துரோக சட்டம் உள்ளிட்டவை நீக்கப்படும்.
கூட்டு பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. கும்பலாக சென்று ஆட்களை அடித்து கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க செய்யப்படும். சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். புகார்தாரருக்கு 90 நாட்களில் வழக்கின் நிலை குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement