ஏன் பயந்து ஓடிட்டாங்க தெரியுமா? ‘இந்தியா’ கூட்டணி வெளிநடப்புக்கு மோடி சொன்ன காரணம்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இதன் மீதான விவாதம் கடந்த 8,9,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இறுதி நாளில் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை வழங்கினார்.

எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், “எதிர்க்கட்சிகள் கூட்டணி பெயரை மாற்றினாலும் ஆட்சிக்கு வர முடியாது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ள UPA கூட்டணி இறந்து புதைக்கப்பட்டு விட்டது, இறுதி அஞ்சலி பெங்களூரில் அனுசரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து 2 மணி நேரம் வரை பேசாததால் அவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகே மணிப்பூர் குறித்து பிரதமர் பேச ஆரம்பித்தார். எதிர்க்கட்சிகள் இல்லாததால் தீர்மானத்தை ஆதரித்து யாரும் வாக்களிக்காத நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

நிகழ்வில் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாம் வீழ்த்திவிட்டோம். ஒட்டுமொத்த நாடு முழுவதும் அவர்கள் பரப்பிய எதிர்மறை விமர்சனங்களுக்கு பொருத்தமான பதிலாக அது அமைந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்க பயந்து நாடாளுமன்றத்தில் இருந்து பாதியிலேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேறிவிட்டனர் என்பதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.

மேலும், “எதிர்க்கட்சிகள் கூட்டணியில் விழுந்துள்ள விரிசல் வெளிப்பட்டுவிடும் என்பதால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அவர்கள் அவையில் இருந்து ஓடிவிட்டனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து ஓடியதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பார்த்தனர். விவாதத்தில் மணிப்பூர் மக்களுக்கு செய்த துரோகம் துரதிருஷ்டவசமானது” என்று கூறினார்.

மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நோக்கமல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், “அவர்கள் எந்த விவாதத்திலும் தீவிரம் காட்டவில்லை, அதில் அரசியல் செய்யவே முயன்றனர்” எனவும் கூறினார்.

எதிர்க்கட்சிகளுக்கு மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும் அவர்களின் வலிகள் குறித்தும் கவலையில்லை. கவனம் முழுவதும் அரசியல் செய்வதிலேயே இருக்கிறது. இதனால்தான் மணிப்பூர் விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசியல் விவாதங்களுக்கு முன்னுரிமை அளித்தனர்” என்று குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளை மிரட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையை கையாள்வதாகவும் பிரதமர் தனது உரையில் குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.