“தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவேன்!" – சஸ்பெண்ட் குறித்து ஆதிர் ரஞ்சன்

கடந்த ஜூலை 20-ம் தேதி தொங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. இதில், மணிப்பூர் வன்முறைத் தொடர்பாக விவாதம் நடத்தவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதாலே, இரு அவைகளிலும் பெரும்பாலான கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததையடுத்து, மணிப்பூர் வன்முறை தொடர்பாக மூன்று நாள்கள் விவாதங்கள் நடைபெற்றது. பிரதமர் மோடியும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான கடைசி நாள் விவாதத்தில் கலந்துகொண்டார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி – பிரதமர் மோடி

அன்றைய விவாதத்தில் பேசிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, “திருதராஷ்டிரன் பார்வையற்று இருக்கும்போது திரௌபதியின் சீலை பறிக்கப்பட்டது. இப்போதும் ஒருவர் அமைதியாக அமர்ந்திருக்கிறார். ஹஸ்தினாபுரமோ, மணிப்பூரோ இன்னும் அதேதான் நடக்கிறது” என்று கூறியிருந்தார். ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் இத்தகைய பேச்சால், அவரை இடைநீக்கம் செய்யும் விதமாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டுவந்தார். உடனடியாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆதிர் ரஞ்சன் செளத்ரி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

பின்னர், தான் பேசியது குறித்து ஆதிர் ரஞ்சன் செளத்ரி, “நீரவ் என்றால் அமைதியாக இருப்பது என்று அர்த்தம். பிரதமர் நீரவ்-ஆக அமர்ந்திருக்கிறார் என்று தான் கூறினேன்” என விளக்கமளித்தார். மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீதான இடைநீக்கத்தை எதிர்த்து, இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் நேற்றைய கூட்டத்தைப் புறக்கணித்து நாடாளுமன்றத்திலிருக்கும் அம்பேத்கர் சிலை நோக்கி பேரணி சென்றனர். இந்த நிலையில், தன் மீதான இடைநீக்க நடவடிக்கையை, `எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க பா.ஜ.க செய்த திட்டமிட்ட செயல்’ என்று ஆதிர் ரஞ்சன் தெரிவித்திருக்கிறார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஆதிர் ரஞ்சன், “நீரவ் என்பதன் அர்த்தம் என்னவென்பதையும், அதனை யாரையும் புண்படுத்தும் நோக்கில் பயன்படுத்தவில்லை என்பதையும் முதல் நாளிலிருந்தே நான் கூறிவருகிறேன். எங்கள் வாதங்களைத் தெளிவாக முன்வைத்து, என் மனதில் தோன்றுவதை வெளிப்படுத்துவதே என்னுடைய நோக்கமாக இருந்தது. அது கூட தவறா… இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவேன். நம் நாடாளுமன்ற வாழ்க்கையில் இதுவரை கண்டிராத புதிய நிகழ்வு இது. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க ஆளுங்கட்சி திட்டமிட்டுச் செய்த செயல் இது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.