அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா… இந்தியாவுக்கு ஆபத்தா? – நிபுணர்கள் கருத்து

சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான
கொரோனா வைரஸ்
உலகம் முழுவதும் கோரதாண்டவமாடி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியது. ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் என நடவடிக்கைகள் எடுத்தாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே விழிபிதுங்கி நின்றன.

முதல் அலை முடிவுக்கு வந்ததும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், அடுத்தடுத்த அலைகள் இன்னும் வீரியமாக வந்து மக்களை அச்சுறுத்தின. கொரோனாவும் உருமாறி ஒமிக்ரான் உள்ளிட்ட திரிபு வகைகளாக மாறி பரவ ஆரம்பித்தது. கொரோனா வீரியம் குறைவின் காரணமாகவும், தடுப்பூசிகள் போடப்பட்டதாலும் மக்கள் இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சமின்றி தங்களது அன்றாடப் பணிகளை கவனித்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் புதிய திரிபு வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. EG.5 அல்லது Eris என அறியப்படும் இந்த கொரோனா வடிவம் ஒமிக்ரான் வைரஸின் XBB.1.9.2 என்ற துணை வகையுடன் தொடர்புடையது.

கொரோனாவின் புதிய திரிபால் கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 6 வரை 1.5 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய 25 நாட்களை ஒப்பிடும்போது 80 சதவிகிதம் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அதுதொடர்பாக நிபுணர்கள் பதிலளித்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்குழுவில் தலைவரான என்.கே.அரோரா அளித்த பேட்டியில், “EG.5 என்கிற கொரோனா வைரஸின் திரிபு வடிவம் மே -ஜூன் மாதங்களில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா பரவல் விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மருத்துவமனைகளில் சேர்வோர் விகிதத்திலும் மாற்றமில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த புதிய வைரஸால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனவும் குறிப்பிட்ட அவர், இது ஒமிக்ரான் XBB திரிபின் துணை வடிவம்தான், இது பல மாதங்களாக இருந்து வருகிறது, பெரும்பாலான மக்கள் அதைப் பற்றி அறிந்துள்ளனர் என்றும் கூறினார்.

இதனிடையே EG.5 வகை வைரஸால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறித்து அச்சம் வேண்டாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். EG.5 என்பது XBB.1.9.2 இன் வழித்தோன்றல்தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டாலும் கண்காணிப்பில் குறையும் இல்லை. தொடர்ந்து கொரோனா வைரஸ் மாதிரிகளை எடுத்து அவற்றைப் பரிசோதித்து வருகிறோம். இதுவரை, 243 புதிய துணை வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை எதுவும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை உலக அளவில் 51 நாட்களில் 7,354 பேர் EG.5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். EG.5 வைரஸால் இன்றுவரை நோயின் தீவிரத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், இதனால் ஏற்படும் பொது சுகாதார அபாயம் உலக அளவில் குறைவானது எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.