சர்வதே கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருக்கும் திலக் வர்மா, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வரும் அவர் 20 ஓவர் தொடரில் முறையே 39, 51 மற்றும் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நல்ல வீரர்கள் இருந்தும் இந்திய அணியின் பேட்டிங் சீரற்ற முறையில் இருந்த நிலையில் திலக் வர்மாவின் ஆட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்வரும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் திலக் வர்மாவை சேர்க்க பரிசீலிப்பதில் தவறு இல்லை என்றும் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மிக மிக குறைவான நாட்கள் மட்டுமே உலகக்கோப்பைக்கு இருப்பதால் இத்தகைய கடுமையான முடிவுகளை அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு எடுக்க வாய்ப்பில்லை. திலக் வர்மா 2022-ல் ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போதிருந்து, அவர் போட்டியில் சிறந்த இளம் திறமையாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இரண்டு ஆண்டுகளில், அவர் மும்பை இந்தியன்ஸின் மிடில் ஆர்டரில் தனது இடத்தைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், இந்திய தேசிய அணியில் இடம் பெறத் தகுதியானவர் என்று நம்பிய கிரிக்கெட் நிபுணர்களின் ஆதரவையும் பெற்றார்.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, ” திலக் வர்மா மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். நான் அவரை இரண்டு வருடங்களாகப் பார்க்கிறேன், அவருக்கு விளையாட வேண்டும் என்ற பசி இருக்கிறது. அதுதான் மிக முக்கியமான விஷயம். அவர் இருக்கும் வயதில் மிகவும் முதிர்ச்சியடைந்தவராக திலக் வர்மா இருக்கிறார். அவருக்கு அவரது பேட்டிங் நன்றாகத் தெரியும். நான் அவரிடம் பேசும்போது, எங்கே அடிக்க வேண்டும், அவரிடம் என்ன இருக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி அவ்வளவு தான் சொல்ல முடியும். உலகக் கோப்பையில் விளையாடுவாரா? என்பது தெரியாது. ஆனால் நிச்சயமாக திலக் வர்மா திறமையானவர். அவர் இந்தியாவுக்காக விளையாடிய இந்த சில விளையாட்டுகளில் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.