“காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே” என பாடி மறைந்த காவிய நாயகி நடிகை ஸ்ரீதேவி பிறந்தநாள்

1. தனது அழகாலும், அபார நடிப்பாலும் ரசிகர்களை தன்வயப்படுத்தி, தவிர்க்க முடியா தலைசிறந்த நடிகையாக தென்னிந்திய திரையுலகையும், ஹிந்தி திரையுலகையும் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த ஆற்றல் மிகு நாயகி நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்த தினம் இன்று…
2. தமிழகத்தில் பிறந்து இந்தியத் திரையுலகின் தனிப் பெரும் ஆளுமையாக உயர்ந்து நின்ற நடிகை ஸ்ரீதேவி, 1969ம் ஆண்டு வெளிவந்த “துணைவன்” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையின் வெளிச்சம் கண்டார்.
3. தொடர்ந்து “நம்நாடு”, “பாபு”, “கனிமுத்து பாப்பா”, “வசந்த மாளிகை”, “பாரத விலாஸ்”, “திருமாங்கல்யம்” என ஏராளமான தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
4. 1976ம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படத்தின் மூலம், தனது 13வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.
5. 13 வயது சிறுமியான நடிகை ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சித்தியாக, ஒரு சவாலான கதாபாத்திரத்தில் தோன்றி, தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

6. 1977ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “16 வயதினிலே” திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த “மயில்” என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
7. தொடர்ந்து வந்த “சிகப்பு ரோஜாக்கள்”, “ப்ரியா”, “குரு”, “ஜானி”, “வறுமையின் நிறம் சிவப்பு” போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகியாக உச்சம் தொட்டார்.
8. 1979ம் ஆண்டு, “16 வயதினிலே” திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பான “சோல்வா சாவன்” என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.
9. “ஹிம்மத் வாலா”, “தோஃபா”, “நகீனா”, “மாஸ்டர் ஜி”, “ஜான்பாஸ்”, “மிஸ்டர் இந்தியா”, “சாந்தினி”, “சால்பாஸ்” என இவர் நடித்த அத்தனை ஹிந்திப் படங்களும் வெற்றிப் படங்களாக அமைய, பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் நடிகை ஸ்ரீதேவி.

10. 1967ல் தொடங்கிய இவரது கலைப் பயணம், 1997 வரை கலையுலகின் உச்ச நாயகியாகவே வலம் வந்தார்.
11. நீண்ட இடைவெளிக்குப் பின் 2004ம் ஆண்டு “மாலினி ஐயர்” என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் இதயங்களையும் வென்றெடுத்தார்.
12. 2011ம் ஆண்டு “இங்கிலீஷ் விங்கிலீஷ்” என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹிந்தி திரையுலகில் மறுபிரவேசம் செய்தார் நடிகை ஸ்ரீதேவி.
13. 2015ம் ஆண்டு வெளிவந்த “புலி” திரைப்படமே இவர் தமிழில் நடித்த கடைசி திரைப்படமாகும். ஹிந்தியில் இவர் நடித்த கடைசி திரைப்படம் “மாம்”.
14. “பத்மஸ்ரீ விருது” உட்பட ஏராளமான விருதுகளை வென்றெடுத்து, பறந்து சென்ற மயிலின் பிறந்த தினமான இன்று அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் அகம் மகிழ்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.