உதயநிதியின் திரைப்பயணத்தில் அதிக பாராட்டுகளைப் பெற்ற படம், பகத் பாசிலின் வேடம் கிளப்பும் சர்ச்சைகள், ஓ.டி.டி ரிலீஸ் என ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து ‘மாமன்னன்’ படம் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது. அந்தப் படத்தில் வடிவேலுவின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு அனைவரையும் கவர்ந்திருந்தது.
அப்படம் அறிவிக்கப்பட்ட முதல் நாளில் வடிவேலுவுக்கு சீரியஸ் கதாபாத்திரம் என்றதும் ஒரு சிலர் கொஞ்சம் யோசிக்கவே செய்தார்கள். ஆனால் தன் அருமையான குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் ‘மாமன்னன்’ வடிவேலு.
இதற்கு முன்னர், ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நாயகனாக அவர் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அவருடைய சரியான கம்பேக் படமாக அமைந்தது ‘மாமன்னன்’தான் என்கிறது தமிழ் சினிமா வட்டாரம். இப்போது ‘மாமன்னன்’ ரிலீஸுக்குப் பிறகு அவரைத்தேடி ஏராளமானோர் கதை சொல்ல வருகிறார்களாம். கதாநாயகன் வேடம், நகைச்சுவை வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்கள் எனப் பலவகையான கதைகள் அவரைத் தேடி வருகின்றன என்கிறார்கள்.
இயக்குநர் மாரி செல்வராஜ் மட்டுமின்றி உதயநிதியும் வடிவேலுவிடம் ‘அண்ணே இந்தக் கதையைக் கேளுங்கள், இது உங்களுக்கு ப்ளஸ் ஆக இருக்கும்’ என்று பரிந்துரை செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி சீமான் உட்பட அவரின் நலம் விரும்பிகள் எல்லோருமே, ‘அண்ணே அடுத்தடுத்து படம் நடிச்சுகிட்டே இருங்க. இடைவெளி விட்டுடாதீங்க!’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்களாம். விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் அவர் நடிக்காவிட்டாலும் இப்போதுள்ள இளம் நாயகர்கள் படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டால் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஓய்வில்லாமல் நடிக்கலாம் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.
இவற்றை விட அனைவரும் ஆச்சரியப்படும்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
இயக்குநர் கௌதம் மேனன் வடிவேலுவைச் சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார். ஸ்டைலிஷான நகரப் பின்னணிகளைக் கொண்டு படம் இயக்கும் கௌதம், வடிவேலுவை இயக்கினால் அந்தப் படம் எப்படியிருக்கும் என்பது இப்போதே ஆச்சரியத்தைத் தரும் ஒன்றாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் ‘ஈரம்’ இயக்குநர் அறிவழகனும் வடிவேலுவுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமியும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் படம் செய்வதாக இருந்து தள்ளிப்போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நலன் குமாரசாமி தற்போது கையில் எடுத்திருக்கும் கார்த்தியின் படம் முடிந்ததும் வடிவேலு படத்திற்கான வேலைகள் சூடு பிடிக்கும் என்கிறார்கள்.
இப்போது அடுத்ததாக வடிவேலு நடிப்பில் ‘சந்திரமுகி 2’ படம் தயாராகியிருக்கிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. அதனால் வடிவேலுவின் கால்ஷீட் இப்போது ஃப்ரீதான். ஆனால், மாமன்னன் ஏற்படுத்திய தாக்கத்தால் அடுத்த படத்தைத் தேர்வு செய்வது அவருக்கு மிகக் கடினமான வேலையாகிவிட்டது என்கிறார்கள்.
அதே சமயம் இப்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் அனைத்து படங்களும் நடைமுறைக்கு வரும்போது பெரும் வரவேற்புகளைப் பெறும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் வடிவேலு!