சீன பொறியாளர்களுக்கு குறி… பாகிஸ்தானில் பயங்கரத் தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் பலி..

பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் சீனாவின் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை துறைமுக பணிகளுக்காக 7 கான்வாய் வாகனங்களில் 23 சீனப் பொறியாளர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதனை குறிவைத்து பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் திடீரென தாக்குதல் நிகழ்த்தியது. காலை 9.30 மணியளவில் துவங்கிய இந்த தாக்குதல், சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்றது. ராணுவத்தினரும் எதிர்தாக்குதலை நடத்தினர்.

குவாதர் நகரம் முழுவதும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தமும், துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டதால் மக்கள் அச்சத்தில் மூழ்கினர். நகரம் முழுவதும் உடனடியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் கான்வாய் வாகனங்களில் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என சீனாவின் குளோபல் டைம்ஸ் ஊடகம் கூறியுள்ளது. சீனப் பொறியாளர்கள் குண்டு துளைக்காத வாகனங்களில் பயணம் செய்ததாகவும் கூறியுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் மக்கள் தொடர்பு பிரிவு, “பயங்கரவாதிகள் சிறிய ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு வலிமையான பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்களுக்கோ அல்லது மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது. இதனால் சிந்து மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் வசிக்கும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் என்பது சீனாவின் சின்சிஜியாங் பகுதியை பலுசிஸ்தான் மாகணத்தில் உள்ள குவாதர் துறைமுகத்துடன் இணைக்கும் திட்டமாகும். இதனால் தங்களுக்கு எந்த பயனுமில்லை என கடந்த காலங்களில் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் ஏராளமான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதன் காரணமாக வலுவான பாதுகாப்புடன் ஆயிரக்கணக்கான சீனர்கள் இத்திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில்தான் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானின் குறைந்த மக்கள் தொகை கொண்ட அதே சமயம் கனிம வளங்கள் அதிகம் நிறைந்த மாகணம். பலுசிஸ்தான் மக்கள் நீண்ட காலமாக மாகாணத்தின் லாபத்தில் நியாயமான பங்கு தங்கள் பகுதிக்கு வரவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பலுசிஸ்தானில் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.