நாங்குநேரியே பற்றி எரியுது.. ஸ்டாலினோ ஜெயிலர் படம் போயிருக்காரு.. இதுதான் திராவிட ஆட்சி.. அண்ணாமலை தாக்கு

தூத்துக்குடி:
“நாங்குநேரியே சாதிக் கலவரத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.. ஆனால் நம்ம முதல்வரோ ஜெயிலர் படம் பார்த்துவிட்டு ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார்.. இதுதான் திராவிட ஆட்சி” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவன் சின்னதுரை, சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. மேலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களின் தாத்தா, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்திருக்கிறார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள அண்ணாமலை இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:

தூத்துக்குடிக்கு பக்கத்துக்கு தொகுதியான நாங்குநேரியில் ஸ்கூல் பசங்க 6 பேர் ஒன்னா சேர்ந்து, அவங்க கூட படிக்கிற பையனையும், அவன் தங்கச்சியையும் வெட்டிருக்காங்க. வெட்டுப்பட்ட மாணவர் பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர். அவரை சாதி பெயரை சொல்லி திட்டி, இந்த பசங்க வீட்டுக்குள்ள புகுந்து வெட்டிருக்காங்க. இதுல வெட்டிய ஒரு மாணவனின் பெரியப்பா திமுகவில் ஒன்றியச் செயலாளராக இருக்கிறான். இதுதான் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் சாதி பெயரை சொல்லி கலவரம் நடக்குது. இதுவரைக்கும் இப்படி ஒரு விஷயத்தை நாம் கேள்விப்பட்டது கூட கிடையாது.

வெட்டுன பையன் என்ன சொல்லி இருக்கிறான் தெரியுமா..? எங்க பெரியப்பா திமுகவில் இருக்காரு. உன்னால என்னடா பண்ண முடியும்னு கேட்டிருக்கான். இதை எல்லாம் பார்க்க வேண்டிய வெட்கக்கேடான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால், இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஒரு ட்வீட் போட்டிருக்காரு.

“நான் ஜெயிலர் படம் பார்த்தேன். தம்பி படத்தை நல்லா எடுத்துருக்காரு” என போட்டிருக்காரு. ஏதோ அவர் ரஜினியை பாராட்டுறாருனு நினைக்காதீங்க. அந்தப் படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலினை புரோமோட் செய்வதற்காக அப்படி பதிவை போட்டிருக்காரு. இங்கே ஒரு ஊரே பற்றி எரியுது. ஆனால் நம்ம முதல்வரோ படத்தை பார்த்துட்டு இருக்காரு. இதுதான் திராவிட ஆட்சி. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.