நாளை முதல் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் ரத்து… அதிரடி காட்டும் தெலுங்கானா அரசு!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநில அரசு 2018ஆம் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தற்போது ஒவ்வொன்றாய் நிறைவேற்றி வருகிறது. கடந்த வாரம் சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், தெலுங்கான அரசு ஊழியர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களை விட அதிக சம்பளம் பெறுவார்கள் என்றார்.

இதேபோல் முசி ஆற்றின் குறுக்கே 14 பாலங்களை கட்டுவதற்கான இடத்தை உடனடியாக தேர்வு செய்து அதற்கான டெண்டர் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் தெலுங்கானா அரசு உத்தரவிட்டது. மேலும் சிறுபான்மையினர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் திட்டம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அறிவித்தது.

இந்நிலையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில நிதியமைச்சர் ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார். 2018 சட்டமன்றத் தேர்தலின் போது விவசாயிகளுக்கு விரிவான பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சந்திரசேகர ராவ் அரசு உறுதியாக இருப்பதாக கூறினார்.

சங்கரெட்டி மாவட்டத்தில் நேற்று விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில நிதியமைச்சர் ஹரிஷ் ராவ், திங்கட்கிழமை முதல், 99,000 ரூபாய்க்கும் குறைவான கடன்களை தள்ளுபடி செய்யும் செயல்முறையை அரசு தொடங்கும் என்றார். மேலும் 15 நாட்களுக்குப் பிறகு, ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான பயிர்க்கடன்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஹரிஷ் ராவ் தெரிவித்தார்.

அப்போது அம்மாவட்ட விவசாயிகளின் கணக்குகளுக்கு தலா ரூ.10,000 உள்ளீட்டு மானியத்தை நிதியமைச்சர் டி ஹரிஷ் ராவ் மாற்றினார். சமீபத்தில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் 4,047 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 10000 ரூபாய் அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. அதன்படி மாநில அரசு ரூ.4.04 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் சங்கரெட்டியில் விவசாயிகளுடனான சந்திப்பின் போது, அமைச்சர் ஆன்லைன் முறையில் அவர்களின் கணக்கிற்கு பணத்தை மாற்றினார். மாற்றிய சில நிமிடங்களில் விவசாயிகளுக்கு வங்கிகளில் இருந்து தகவல் கிடைத்தது. இதன்மூலம் 3,650 விவசாயிகள் இழப்பீடு பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.