புதுச்சேரி: “அரசுக்கு எதிராக செயல்படும், மக்கள் திட்டங்களை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்யப்படுவர்” என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் சுதந்திர 75-வது அமுதப் பெருவிழா நிறைவடைவதை முன்னிட்டு மக்கள் அனைவரும் இன்று முதல் 15-ம் தேதி வரையில் வீடுகளில் கொடியேற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் புதுச்சேரியில் 5 லட்சம் தேசியக் கொடிகள் வீடுகள், அலுவலகங்களில் ஏற்றப்படவுள்ளன.
நாடெங்கும புனித மண் அமுதக் கலசத்தில் சேகரிக்கப்பட்டு டெல்லியில் ராஜ்கோட்டில் வைக்கப்படவுள்ளது. அதன்படி புதுச்சேரியில் 108 கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட 125 இடங்களில் புனித மண் சேகரிக்கப்பட்ட அமுதக் கலசங்கள் வரும் 17-ம் தேதி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நேரு யுவகேந்திரா துணை இயக்குநரிடம் ஒப்படைக்கபப்டும்.
அதன்பின் கலசங்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வரும் 27-ம் தேதி பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. புதுச்சேரியிலிருந்து கொண்டு செல்லப்படும் அமுதக் கலசங்கள் தனியாகவே பிரதமரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள தியாகச் சுவர் பிரதமரால் காணொலிக் காட்சி மூலம் விரைவில் திறக்கப்படவுள்ளது. புதுச்சேரி வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தியாகச்சுவரை பாராட்டியுள்ளார்.
பல அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். அரசுக்கு எதிராக செயல்படும், மக்கள் திட்டங்களை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்யப்படுவர். புதுச்சேரி சட்டப்பேரவை திட்ட மாதிரி வரைபடம் முடிக்கப்பட்டு, அடுத்த வாரம் டெல்லிக்கு அனுப்பப்படும்.
சட்டப்பேரவை கட்ட நிதி ரூ.528 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓபிசி கணக்கெடுப்பு அங்கன்வாடி ஊழியர்கள் மூலமே செயல்படுத்தப்படும். சார்பு செயலர்கள் கோப்புகளை தயாரிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்வது புதுச்சேரியில் தான் நடக்கிறது. பணியை அவர்கள் துரிதமாக செய்ய வேண்டும் என முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார். பணி செய்யாத சில சார்பு செயலர்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். என்றார்.
தேசியக் கொடி வழங்கல்: முன்னதாக பேரவைத் தலைவர் செல்வம் அங்கன்வாடி பணியாளர்களிடம் தேசியக் கொடிகளை வழங்கி, அவற்றை வீடுகள் தோறும் விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் அவர் மணவெளி தொகுதியில் இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியையும் ஆரம்பித்து வைத்தார்.