'மாமன்னன்' படத்தை தடை செய்யணும்.. தேவர், கவுண்டர், வன்னியர்களை தூண்டி விடுறீங்களா..? கிருஷ்ணசாமி ஆவேசம்

சென்னை:
நாங்குநேரி சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘மாமன்னன்’ திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார்.”சும்மா இருந்த தேவர், கவுண்டர் சாதிக்காரர்களை எல்லாம் தூண்டி விடுகிறீர்களா?” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாங்குநேரியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனும், அவனது தங்கையும் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

நாங்குநேரி சம்பவம் குறித்து அனைவரும் பேசுகிறார்கள். அது இப்போது நடந்துள்ள விஷயம். இதற்கு முன்பு பல முறை சாதி ரீதியிலான கொலை, தாக்குதல் போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நிகழ்ந்து வந்தன. ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய திமுக அரசு, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதி ரீதியான கொலைகளையும், அராஜகங்களையும் செய்யும் துணிவு அதனால்தான் பலருக்கு வந்திருக்கிறது.

இப்போது உதயநிதி நடித்து கடந்த மாதம் ஒரு படம் (மாமன்னன்) வந்தது. இந்த நேரத்தில் அந்த படம் வருவதற்கான அவசியம் என்ன? அந்த திரைப்படத்தில் வரும் வில்லனான ஃபகத் பாசிலை இன்று சில ஆதிக்க சாதி இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது யாருடைய தவறு? அதில் எப்படி வசனம் வருகிறது? “நான், என் அப்பா, என் தாத்தா, என் பிள்ளை அனைவரும் உங்களை நிற்க வைத்துதான் பார்ப்போம். அதுதான் எங்கள் பண்பாடு” என வில்லன் பேசுகிறார். இது ஒரு வசனமா.. சமூக நீதி பேசக்கூடிய திமுகவின் கொள்கை இதுதானா?

நாங்கள் வேறு நிலையில் இருந்திருந்தால் திமுகவை அடியோடு அழித்திருப்போம். என்ன வசனத்தை நீங்க அனுமதிக்கிறீங்க? முதலில் மாமன்னன் படத்தை தடை பண்ணனும். பிறகு, இந்தப் படத்தில் நடித்து வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யணும். இன்னைக்கு சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இந்தப் படம்தான் காரணம். சும்மா இருந்த தேவர், கவுண்டர், முதலியார், வன்னியர் மக்களை நீங்க தூண்டி விடுறீங்களா? தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு மிகப்பெரிய சாதி கலவரத்தை ஏற்படுத்துவதற்கான திமுக இந்த படத்தை வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.