லக்னோ, உத்தர பிரதேசத்தில், ஆர்.டி.ஐ., எனப்படும், தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல்கள் கேட்ட விண்ணப்பதாரரின் நடத்தை, நோக்கம் சரியல்ல எனக் கூறிய தகவல் ஆணையம், அவரை விண்ணப்பிப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.
உ.பி.,யின் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் சுக்லா என்பவர், சில தகவல்கள் கோரி, கடந்த மாதம் ஆர்.டி.ஐ., சட்டத்தில் விண்ணப்பித்துஇருந்தார்.
இந்நிலையில், அவரது விண்ணப்பத்தை, கடந்த 17ம் தேதி நிராகரித்த மாநில தகவல் ஆணையம், ஆர்.டி.ஐ., சட்டத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக, உ.பி., மாநில தகவல் ஆணையர் அஜய் குமார் உப்ரேட்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தகவல் ஆணையர் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக, தீபக் சுக்லா அநாகரிகமான கருத்துக்களை தெரிவித்து அச்சுறுத்தி உள்ளார்.
கடந்த ஜூன் 27ல், இது போன்ற மற்றொரு வழக்கில், பொது தகவல் அதிகாரி ஒருவரை தாக்கியதாக, ஏற்கனவே தீபக் சுக்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர், மிகவும் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறார்; வேண்டு மென்றே விவாதம் செய்கிறார்.
ஆர்.டி.ஐ., என்பது, தீபக் சுக்லாவுக்கு மிரட்டல் மற்றும் அடக்குமுறையின் கருவி. இதை அவர் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடும் என்பதை ஆணையம் கண்டறிந்துள்ளது.
எனவே, பொது அதிகாரிகளிடம் இருந்து, ஆர்.டி.ஐ., சட்டத்தில் தகவல் கேட்டதற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்