புதுடில்லி:“எல்லைப் பாதுகாப்புப் படையின் சாவ்லா முகாம் அருகே, டில்லி குடிநீர் வாரியம் சார்பில், நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்,” என, வாரிய துணைத் தலைவர் சோம்நாத் பாரதி கூறினார்.
தென்மேற்கு டில்லி சாவ்லாவில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில்,
வீரர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 5,000 பேர் தங்கியுள்ளனர்.
இந்த முகாமில், தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. இதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தருமாறு, டில்லி குடிநீர் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
வாரியத் துணைத் தலைவர் சோம்நாத் பாரதி, எல்லைப் பாதுகாப்புப் படை முகாமுக்கு நேற்று முன் தினம் சென்று ஆய்வு செய்தார்.இதையடுத்து, குடிநீர் இணைப்புக்கு டில்லி குடிநீர் ஆணையத்தில் விண்ணப்பிக்குமாறு, எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து, பாரதி கூறியதாவது:
நஜாப்கர் வடிகால் அருகே நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க ஒப்பந்தம் விடும் பணி முடிந்து விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் கட்டுமானப் பணிகள் துவங்கப்படும்.
எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் இருந்து 600 மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சாவ்லா முகாமுக்கு மட்டுமின்றி, நஜாப்கர் மற்றும் மத்தியாலா தொகுதிகளில் உள்ள 36 கிராமங்கள் மற்றும் அருகிலுள்ள காலனிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதற்காக, சாவ்லா முகாம் மற்றும் தவுலத்பூர் இடையே ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய குடிநீர் குழாய் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement