தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தில் அருள்மிகு மாளிகைப்பாறை கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா நடைபெறும். திருவிழாவின் பூஜைகளுக்குப் பிறகு பக்தர்கள் கருப்பசாமிக்கு நேர்த்திக்கடனாக வாங்கி வந்த மதுபாட்டிலில் உள்ள மதுவை குடித்துவிட்டு சாமியாடி முருகன் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்வது வழக்கம். இந்தாண்டும் திருவிழா நடந்துமுடிந்த பிறகு மதுகுடித்துவிட்டு அருள்வாக்கு கூறினார் சாமியாடி முருகன். கருப்பசாமிக்கு மது குடிப்பது பிடிக்கும் என்பதால் பக்தர்கள் பல வித மது பாட்டில்களை தங்களின் காணிக்கையாக கோயிலில் கொடுத்தனர்.
பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட மது பாட்டில்கள் கருப்பசாமி சிலை முன்பு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. ”மேளத்தை அடிக்கலாம்.. பூஜையை தொடங்கலாம்” என வயதான பெரியவர் ஒருவர் சொல்ல, மேளம் வாசிக்கப்பட்டது. அரிவாளை இருவர் பிடித்துக் கொள்ள அரிவாள் மீது ஏறி நின்றார் சாமியாடி முருகன். கண்களை மூடிக்கொண்டு கைகளை நீட்ட.. , அவரிடம் ஃபுல் மது பாட்டில் ஒன்று கொடுக்கப்பட்டது.
மது பாட்டிலைத் திறந்தவர் மடமடவென மதுவைப் பருகினார். அத்துடன் இரண்டு சுருட்டுக்களை பற்ற வைத்தவர் புகைத்து தள்ளினார். பின்னர், திரண்டிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக தங்களின் குறைகளைச் சொல்ல, அதற்கு அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்தார். இறுதியாக அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம், ”ஆன்மிகம் சம்மந்தமாவா கேட்கப் போறீங்க.. அரசியல் சம்மந்தாமாத்தானே? எல்லாம் எனக்குத் தெரியும்” என சிரித்தார்.
“பாராளுமன்ற எலக்ஷன் நெருங்குறதுனால எலக்ஷனை எதிர்கொள்ள கட்சிகளும் கட்சி தலைவர்களும் தயாராயிட்டு இருக்காங்க. அதுல, சில கட்சிகள் பரபரப்பா இருக்கு. சில கட்சிகள் பயத்துலயும் பதட்டத்துலயும் இருக்கு. சின்ன சின்னக் கட்சிகள் யோசனையில இருக்கு. ஆனா, கடைசி வரைக்கும் ஆட்சி குழப்பத்துலதான் போகும். இதுக்கு மேல எதுவும் சொல்லமுடியாது” என்றவர் பாட்டிலில் மீதி வைத்திருந்த மதுவை ஒரே கல்பாக குடித்து முடித்தார். அருள்வாக்கிற்குப் பிறகு பக்தர்களுக்கு கிடா விருந்து அளிக்கப்பட்டது.