இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திம வீரக்கொடி அண்மையில் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் லீசா வொன்ஸ்டோல் இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
இங்கு, நட்புறவுச்சங்கத்தின் உப தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் கௌரவ அசோக் அபேசிங்க ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் செயலாளராகவும், கௌரவ ஹர்ஷண ராஜகருணா உதவிச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டதுடன், பொருளாளராக கௌரவ சாகர காரியவசம் தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இலங்கை மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் இடையில் 7 தசாப்த கால இரு தரப்பு உறவுகள் நிலவி வருவதாகவும், இக்காலகட்டத்தில் ஐக்கிய இராஜ்ஜியம் இலங்கைக்கு வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன் ஜனநாயகத்துக்கான வெஸ்மினிஸ்டர் மன்றம் (WFD) ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற பணியாளர்களுமான மாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் ஆய்வுப் பயணங்கள் மூலம் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படுவது குறித்து நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் லீசா வொன்ஸ்டோல் குறிப்பிடுகையில், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற பலதரப்பு நிறுவனங்கள் ஊடாக ஐக்கிய இராஜ்ஜியம் இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். அத்துடன் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க ஏனைய கடன் வழங்குநர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திம வீரக்கொடி, நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இதன்மூலம் இலங்கைக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.