“எனது இறுதிச் சடங்குக்கு வா” – காதலியை உருக்கமாக அழைத்த காதலன்… வீடியோ பேசும்போதே உயிரை விட்ட பரிதாபம்..

தனது இறுதி சடங்கிற்கு வருமாறு காதலிக்கு அழைப்பு விடுத்த இளைஞர் வீடியோவில் பேசும்போதே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த நொளமங்கலா பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிரண். 22 வயதான இவருக்கு சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் கடித்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் ரேபிஸ் தொற்று தாக்குதலுக்கு ஆளானார். இதற்காக பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கிரண் ஆகஸ்ட் 9ஆம் தேதி உயிரிழந்தார்.

இறக்கும் முன்பாக கிரண் தனது காதலிக்கு உருக்கமாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தாமதமாக அடுத்த சில நாட்கள் கழித்து பதிவிடப்பட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவில் பேசும் கிரண், “ஹாய் பங்காரி.. உங்க அப்பா சொன்னது போலவே நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.. உங்கள் அனைவரையும் விட்டு செல்கிறேன். உனக்குப் பிறக்கும் குழந்தைக்கு என் பெயரை வைக்க முடியுமா..

தயவு செய்து என்னுடைய இறுதி ஊர்வலத்திற்கு வா.. உன் தங்கையையும் அழைத்து வா. உங்கள் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள்” என்று உருக்கமாக பேசுகிறார். அதனை அழுதபடியே ஒருவர் வீடியோ எடுக்கிறார். வீடியோ எடுத்துகொண்டிருக்கும்போதே திடீரென வலிப்பு வந்து கிரண் உயிரிழந்தார்.

கிரண் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தான் காதலித்த பெண்ணுக்கு மோதிரமும் வாங்கித் தந்துள்ளார். இதனையறிந்த அந்த பெண்ணின் தந்தை, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே இளம்பெண் வீட்டில் ஏதோ செய்து கிரணை கொன்றுவிட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் கிரண் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.