இந்திய அணியின் நிரந்தர பந்துவீச்சாளர் பட்டியலில் இருந்த குல்தீப் யாதவ் திடீரென கொஞ்சம் நாள் காணாமல் போனார். அதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா? இல்லையா? என்றெல்லாம் கேள்வி எழுந்தது. ஆனால், கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரின் இந்த மறுபிரவேசத்துக்குப் பின்னணியில் ரிஷப் பந்த் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் குல்தீப் யாதவ் 3 ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளையும், 20 ஓவர் தொடரில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் அபாயகரமான பேட்ஸ்மேனாக இருக்கும் நிக்லோஸ் பூரன் விக்கெட்டை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கே பங்களித்திருக்கிறார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தாலும் குல்தீப் யாதவ் தனக்கான இடத்தை திரும்ப பெற்றிருப்பதாக அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு குல்தீப் யாதவ் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. ஐபிஎல் போட்டியிலும் சிறப்பாக ஆடாததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை தங்கள் அணியில் இருந்து விடுவித்தது. ஆனால் அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது. ரிஷப் பந்த் கொடுத்த ஆதரவின் அடிப்படையிலேயே குல்தீப் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட முடிந்ததாக தெரிவித்திருக்கும் அபினவ் முகுந்த், ரிக்கி பாண்டிங்கின் ஆதவையும் பெற்றதாக கூறியுள்ளார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் குல்தீப் யாதவ் எதிர்வரும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அபினவ் முகுந்த் குறிப்பிட்டுள்ளார். நல்ல பார்மில் இருப்பதால் நிச்சயம் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவை இந்திய தேர்வுக்குழுவினர் பரிசீலிப்பார்கள் எனக் கூறியுள்ளார். அப்படி எடுக்கப்பட்டால் ஜடேஜாவுடன் குல்தீப் இணையாக பந்துவீசுவார் என்றும் அபினவ் முகுந்த் யூகித்துள்ளார்.