புதுடெல்லி: தமிழகத்தின் கோயம்புத்தூரின் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி, கடந்த வருடம் அக்டோபர் 18 முதல் காலியாகவே உள்ளது.
புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி நேரம் ஒதுக்கவில்லை என புகார் நிலவுகிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் டெல்லி யுஜிசி வட்டாரங்கள் கூறியதாவது:
கேரளாவின் ஏபிஜே அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனவழக்கில் உச்ச நீதிமன்றம் 2022-ல்தீர்ப்பளித்திருந்தது. அதில், 2018-ல்வெளியான யுஜிசி அறிவுறுத்தலின்படி அதன் உறுப்பினரை அனைத்து தேர்வுக் குழுவிலும் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து தமிழகஅரசுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இக்கடிதத்தில் யுஜிசி உறுப்பினரை பாரதியார் உள்ளிட்ட அனைத்து பல்கலைகழகங்களின் தேர்வுக்குழுக்களிலும் சேர்க்கதிருத்தம் செய்து அரசிதழில் வெளியிட அறிவுறுத்தப்பட்டது
கல்வி பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் மாநிலஅரசின் பல்கலைக்கழகங்களுக்கும் சுமார் 80 சதவிகித நிதி யுஜிசியால் அளிக்கப்படுவதும் ஒரு காரணம். எனவே, அனைத்து மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்களிலும் தனது உறுப்பினர் இடம்பெற யுஜிசி விரும்புவதில் தவறு இல்லை. இதை தமிழக அரசு செய்யாமல் இருப்பதால்தான் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிப்பதில் முடக்கம் ஏற்பட்டு உள்ளது. இதை யுஜிசிக்கு வந்த புகார்களில் குறிப்பிட்டு பதிலாக எழுத உள்ளோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2018-ல் யுஜிசி வெளியிட்ட அறிவிக்கையில் 7 -வது பிரிவின் எண்-3 இல் புதிய துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ஐந்து விதிமுறைகள் வெளியாகி உள்ளன. அதில், இரண்டாவதாக, தேர்வுக்குழுவில் அமர்த்தப்படும் 3 முதல் 5 உறுப்பினர்களில் யுஜிசி சார்பில் ஒருவர் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அறிவுறுத்தலை மாநில அரசுகள் முழுவதுமாக நடைமுறைப்படுத்துவதில்லை. மாறாக, இதில் தமக்கு சாதகமான அம்சங்களை மட்டும் ஏற்றுக் கொள்வதாக ஒரு கருத்து உள்ளது. உதாரணமாக, துணைவேந்தரின் வயதுவரம்பு 70 என உயர்த் தப்பட்டதை பெரும்பாலான மாநில அரசுகள் உடனடியாக அமலாக்கின. இச்சூழலில், தனது உறுப்பினரை மாநில அரசுகளின் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழுக்களிலும் சேர்க்க, சட்ட திருத்தம் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த திருத்தத்துக்கு ஏற்ற வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களும் தம் நிர்வாக விதிமுறைகளிலும் மாற்றம் செய்ய வேண்டி வரும். தமிழகத்தின் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேர்வுக் குழுக்களின் பாதி எண்ணிக்கையில் அரசு சார்பிலான உறுப்பினர்களும், மீதி எண்ணிக்கையில் ஆளுநர் சார்பிலான உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் புதிதாக யுஜிசி உறுப்பினரும் சேர்க்கப்பட்டால், தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களின் புதிய துணைவேந்தர் நியமனத்தில் மத்திய அரசின் தலையீடு உருவாகும். இதில் தமது சுதந்திரம் பறிபோகும் என்ற அச்சத்தால், தமிழக அரசின்உயர் கல்வித்துறை தமிழக ஆளுநரின் கருத்தை ஏற்பதில் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அடுத்த சிலநாட்களில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது. இந்த பல்கலை.யிலும் புதிய துணை வேந்தரைத் தேர்வு செய்வதும் தாமதமாகும் என்று தெரிகிறது.