புதுச்சேரி: நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மக்களிடையே தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில் ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக தேசியக் கொடியுடன் நாட்டு மக்களை செல்ஃபி எடுக்கச் சொல்லி காலர் ட்யூன் ஒலித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த காலர் ட்யூன் வெளியாகி இருந்தது. தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.
நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ‘ஹர் கர் திரங்கா’ என்ற இயக்கத்தை பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தார். நாட்டின் பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஓராண்டாகவே வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் தங்களது சமூக வலைதளத்தின் முகப்பு படத்தை தேசியக் கொடியாக மாற்ற வேண்டும் எனவும் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் பயனர்கள் செல்போனில் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் போது ‘தேசிய கொடியுடன் நாட்டு மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு, அந்தப் படத்தை ‘www.harghartiranga.com’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்’ என மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது காலர் ட்யூன். அதன் பிறகே பயனர்களால் போன் அழைப்பு மேற்கொள்ள முடிகிறது. நாடு முழுவதும் ஹர் கர் திரங்கா இயக்கம் சார்ந்து தேசிய கொடியுடன் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.