திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் அருகே உள்ள பெரியகருப்பட்டிமூளை கிராமத்தை சேர்ந்தவர் அருள்(37). பட்டியலினத்தை சேர்ந்தவர் இவரின் மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளார். அருள் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் செய்து வருகிறார். தனியார் நிதி நிறுவம் ஒன்றில் மூலம் கடன் பெற்று மாதத்தவணையில் பணம் கட்டும் வகையில் தனியார் கம்பெனியில் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார்.
இதன் தவணையை அருள் முறையாக செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து டிராக்டர் வாங்குவதற்கு கடன் கொடுத்த தனியார் வங்கி கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அருளை விசாரணைக்காக அழைத்துள்ளார்.
அப்போது அருளின் சட்டை மற்றும் வேட்டியை கழட்டி அரை நிர்வாணமாக காவல் நிலையத்தில் மண்டியிட வைத்துள்ளார் சிவக்குமார் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான சிவக்குமார் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அருளை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அருளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அருளிடம் பேசினோம், “நான், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். 2021-ல் தனியார் டிராக்டர் கம்பெனி ஒன்றில் ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மாதத் தவணையில் டிராக்டர் ஒன்று வாங்கினேன். தவணையாக ரூ.45,400 கட்டியிருக்கிறேன்.
தாட்கோவில் மானியத்தில் வாகன கடன் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். என் பெயரில் டிராக்டரை ரிஜிஸ்டர் செய்து விட்டால் கடன் கிடைக்காது என்பதால் ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம், என்னால் முழுமையான தொகையை செலுத்த முடியாது என்றேன். ஆனால் எனக்கு அழுத்தம் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து விட்டனர்.
இதனை தொடர்ந்து தவணை பணத்தை செலுத்துவதற்கு நேரம் கேட்டிருந்தேன். ஆனால் என் மீது டிராக்டர் கம்பெனி நிர்வாகத்தினர் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த 11-ம் தேதி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் என்னை விசாரணைக்காக அழைத்தார். அவரிடம், `பணத்தை முழுமையாக செலுத்தி விடுகிறேன் சார்… கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ என்றேன். அதை கேட்காமல், `உனக்கெல்லாம் எதுக்குடா டிராக்டர்?’ என்று என் சாதியை சொல்லி திட்டினார்.
அத்துடன் என் சட்டையை கழட்டி வேட்டியை உருவி என்னை ஜட்டியுடன் மண்டிப்போட வைத்தார். டிராக்டர் கம்பெனியில் இருந்து வந்தவர்களிடம் இந்த சாதி ஆளுங்களுக்கு ஏன் வண்டி கொடுக்குறீங்க என்று கேவலமாக பேசினார். பின்னர் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். எனக்கு அவமானம் தாங்கவில்லை. ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நடந்து கொண்டது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. மானம் போய் விட்டது இனி வாழ்ந்து என்ன பண்ணப்போறோம் என்று என் மனைவி மகனை கூட நினைத்து பார்க்காமல் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடிச்சிட்டேன்.
மனைவி கவனிக்கவில்லை என்றால் இந்நேரம் செத்து போயிருப்பேன். பணத்தை திருப்பி கட்டி விடலாம் போன மானம் திரும்ப வருமா?”என்றார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பேசினோம், “கடனையும் செலுத்தவில்லை, டிராக்டரையும் கண்ணில் காட்டவில்லை என கடன் கொடுத்த கம்பெனி தரப்பில் புகார் கொடுத்திருந்தனர். கடனை திருப்பி செலுத்த அருள் ஒரு மாதம் அவகாசம் கேட்டார்.
அதை தந்தேன்… அதன் பின்னரும் அவர் பணம் செலுத்தவில்லை. பிறகு அந்த வங்கியை சேர்ந்தவர்களிடம், விவசாயியை கஷ்டப்படுத்த முடியாது. நீங்கள் நீதிமன்றம் மூலம் பிரச்னையை தீர்த்துகொள்ளுங்கள் என்றதுடன் இரு தரப்பிலும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி விட்டேன். ஆனால் சிலருடைய தூண்டுதலில் அரை நிர்வாணமாக மண்டியிட வைத்தேன் என பொய் சொல்கிறார். அப்படி ஒரு சம்வமே நடக்கவில்லை. அத்துடன் உதட்டில் பூச்சி மருந்தை தடவிக்கொண்டு விஷம் குடித்து விட்டதாகவும் நாடகமாடி கொண்டிருக்கிறார்” என்றார்.