நீட் பலி பீடத்தின் இறுதி மரணம்… இனியும் அந்த சிந்தனை வேண்டாம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழகத்தில் நீட் தேர்வை வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோகும் எனக் கூறி நீட் விலக்கு பெற குரல் கொடுத்து கொண்டிருக்கின்றனர். தற்போது அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தான் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதுவும் இல்லை எனில் மிகவும் சிரமம் ஏற்படக்கூடும்.

நீட் தேர்வு – எதிர்ப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

நீட் தேர்வு தற்கொலை

இதற்கிடையில் நீட் தேர்வை அடுத்தடுத்து எழுதி தோல்வி அடைபவர்கள் விரக்திக்கு ஆளாகின்றனர். இவர்கள் தவறான முடிவுகள் எடுப்பதை பார்க்க முடிகிறது. இப்படி ஒரு சிந்தனை வேண்டாம் என்று மாநில அரசும், சமூக நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார்.

இரங்கல்

மருத்துவக் கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியை தழுவி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இந்த துக்கம் தாள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் அடுத்த நாளே உயிரை மாய்த்துக் கொண்டார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எந்த மாணவரும் எடுக்க வேண்டாம். உங்கள் உயர்வுக்குத் தடைக் கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்கலாம்.

நீட் விலக்கு பெற நடவடிக்கை

அதற்கான சட்ட ரீதியான முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வு தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டிப் படித்தால் வெற்றி பெறும் தேர்வாக இருக்கிறது. அப்படி பணம் கட்டி படிக்க முடியாத மாணவர்கள் தோற்கிறார்கள். குறைவான மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி என்ற தகுதியை பெற்றவர்களும், பணம் வைத்திருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும்.

இட ஒதுக்கீடு

இதன்மூலம் பணம் படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி என்ற நிலை காணப்படுகிறது. ஏழை எளிய மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் தமிழக அரசால் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்பவர்கள் தான். இதுகூட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரியவில்லை. இவரிடம் நேருக்கு நேராகவே சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநரால் பதில் கூற முடியவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறியாமை

நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது, அவரது அறியாமையை தான் காட்டுகிறது. இன்னும் சில மாதங்களில் அரசியல் மாற்றம் நிகழும் போது நீட் தடுப்பு சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். கையெழுத்து போட மாட்டேன் என்று கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள்.

மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவுக்கும் ஆழமான அஞ்சலி. இவர்கள் மரணமே நீட் பலி பீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.