புதுச்சேரி, :விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு நன்கொடை தர மறுத்ததால், பேக்கரிக்குள் புகுந்து கடை ஊழியரை தாக்கி சூறையாடிய வழக்கில் தலைமறைவாக உள்ள7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி – விழுப்புரம் சாலையில், ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் அருகே அமைந் துள்ளது விநாயக முருகன் ஸ்வீட் மற்றும் பேக்கரி. கடந்த வாரம் பேக்கரிக்கு வந்த உழவர்கரை பகுதி யைச் சேர்ந்த சிலர், ‘நாங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்’ என அறிமுகம் செய்து கொண்டு, ‘உழவர்கரையில் வி.சி., கட்சிக்கு அலுவலகம் கட்ட உள்ளோம், 50 மூட்டை சிமெண்ட் வாங்கி தர வேண்டும்’ என கட்டாயப்படுத்தி, உரிமையாளர் கிேஷார்குமாரிடம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு சென்றனர்.
சிமெண்ட் மூட்டை வாங்கி தராததால் கோபமடைந்த வி.சி., கட்சியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள், கடந்த 12ம் தேதி மாலை பேக்கரிக்கு வந்தனர்.
கடை ஊழியர் ஆனந்தகுமாரிடம் சென்று, வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்த மாட்டீர்களா என கேட்டு சரமாரியாக தாக்கி கடையை சூறையாடினர். ஆனந்தகுமாரை, சக ஊழியர்கள் மீட்டு கடைக்குள் அழைத்து சென்றனர்.
மூடி மறைக்க முயற்சி
இந்த தாக்குதல் தொடர்பாக பேக்கரி சார்பில் புகார் அளிக்கப்பட்டபோது, முதலில் புகாரை பெற ரெட்டியார்பாளையம் போலீசார் மறுத்தனர்.
இந்நிலையில், பேக்கரிக்குள் புகுந்து 8 பேர் கொண்ட வி.சி., கட்சி கும்பல் ஊழியரை தாக்கும் ‘சிசி டிவி’ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதால், வேறு வழியின்றி வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
கடை உரிமையாளர் கிேஷார்குமார் அளித்த புகாரின்பேரில், உழவர்கரை ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அரசியல் பிரமுகர் ‘அழுத்தம்’
தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அரசியல் பிரமுகர்ஒருவர் அளித்த கடும் நெருக்கடி காரணமாக, இருவரை யாருக்கும் தெரியாமல் போலீசார் விடுவித்தனர்.
சம்பிரதாயத்திற்காக உழவர்கரை சுப்ரமணி, 33, என்பவரை மட்டும் கைது செய்தனர். மற்றவர்கள் முன்ஜாமீன் பெற ஏற் பாடு செய்து வருகின்றனர்.
பயந்து நடுங்கும் போலீஸ்
புதுச்சேரியில் வி.சி., கட்சியினரிடம் போலீசார் அடி வாங்கிய வரலாறு உள்ளது. தலைமை செயலகத்திற்குள் புகுந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல், திருநள்ளார் போலீஸ் நிலையத்தை சூறையாடி போலீசார் மீது தாக்குதல் என பட்டியல் நீள்கிறது.
இதனால், வி.சி., கட்சியினரை பார்த்தாலே போலீசார் பயந்து நடுங்குகின்றனர்.
வழக்கு பதிந்து கைது செய்தாலோ, வி.சி., கட்சியினர் குறித்த தகவல்களை பத்திரிக்கைகளுக்கு தெரிவித்தாலோ போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து நம்மை தாக்கி விடுவார் களோ என பயப்படுகின்றனர்.
இதனால், மூடி மறைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர்.
‘போட்டு உடைக்கும்’ அதிகாரி
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பேக்கரி யில் புகுந்து வி.சி., கட்சியினர் தாக்குதல் நடத்தியது தொடர்பான விபரங்கள், யார் யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, கைது செய்யப்பட்டவர்கள் யார் போன்ற விபரங்களை தெரிவிக்க முடியாது.
வி.சி., கட்சியினர் குறித்து பத்திரிகையில் தகவல் தெரிவித்தால், மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும். அதனால், எப்.ஐ.ஆர்., தகவல்களை தர வேண்டாம் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்’ என தெரிவித்தார்.
நடு நடுங்கும் போலீஸ்முதல்வருக்கு தெரியுமா?
தாக்குதல் நடத்தப்பட்ட பேக்கரியில் இருந்து, கூப்பிடும் துாரமான 50 அடி துாரத்தில் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலையம் அருகிலே எவ்வித பயமும் இல்லாமல் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது, போலீசாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.இருந்தபோதும், வி.சி., கட்சியினர் குறித்து தகவல்களை கசிய விடாமல் மூடி மறைப்பது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது, போலீசார் மீதான பொது மக்களின் நம்பிக்கையை இழக்க செய்யும்.இப்படி, ஒரு கட்சிக்கு பயந்து கைது செய்யவும், கட்சி பெயரை வெளியிடவும் போலீசார் பயந்தால், எதிர்காலத்தில் ஒவ்வொரு கடையாக சென்று, நன்கொடை கேட்டு தாக்குதல் நடத்துவர். ஊரில் நடக்கும் இதுபோன்ற பிரச்னைகள் எல்லாம் முதல்வர் ரங்கசாமிக்கு தெரியுமா?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்