வெறும் 160 மார்க், ரூ.25 லட்சத்துக்கு டாக்டர் சீட்… நீட் தேர்வை ஒன்னுமே பண்ண முடியாதா? உதயநிதியிடம் ஃபயாஸ்தின் ஆவேசம்!

”நீட் தேர்வை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாதா? இன்னும் எத்தனை மாணவர்களை தான் இழக்கப் போகிறோம்? எத்தனை அனிதாக்களை, எத்தனை ஜெகதீஷ்களை இழக்கணும்? 12ஆம் வகுப்பு படித்துவிட்டு நீட், ஜேஇஇ என இதே வேலையா போச்சு. அப்புறம் எதுக்காக 12ஆம் வகுப்பு படிக்கணும். என்கிட்ட பணம் இருக்கு, அதனால் எம்.பி.பி.எஸ் சேர்ந்துட்டேன். என் நண்பனிடம் பணமில்லை. உயிரை விட்டுட்டான். பணம் தான் முக்கியமானதாக இருக்கிறது.

ஆளுநரை வெளுத்து வாங்கிய முத்தரசன்? நீட் தேர்வு என்பதே பொய் என பேட்டி..

நீட் தேர்வு மரணம்

ஆளுநருக்கு எதிராக எதுவுமே செய்ய முடியவில்லை”. இப்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து ஆவேசமாக கேட்ட குரல் மாணவர் ஃபயாஸ்தின் என்பவருடையது. இவர் நீட் தேர்வு எழுதி அதன்பிறகு பணம் கொடுத்து மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர். ஆனால் இவரது நண்பர் ஜெகதீஸ்வரன் நன்றாக படிக்கக் கூடியவர். நீட் தேர்வை அடுத்தடுத்து எழுதி தோல்வி அடைந்து, அந்த விரக்தியில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

நண்பன் ஃபயாஸ்தின் கேள்விகள்

இதையடுத்து தந்தையும் உயிரை விட்டுள்ளார். தனது நண்பனின் இழப்பிற்கு நீதி கேட்கும் வகையில் அமைச்சர் உதயநிதியிடம் மேற்குறிப்பிட்ட வகையில் மாணவர் ஃபயாஸ்தின் கேள்விகளை அடுக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் செய்தியாளர்களிடம் நேரடியாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது நீட் தேர்வு விவகாரத்தில் மிக மிக முக்கியமானதாக தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, நீட் தேர்வில் நான் 160 மார்க். ஜஸ்ட் பாஸ்.

பணம் கொடுத்து மருத்துவ சீட்

என் அப்பா பொருளாதார ரீதியில் நன்றாக இருந்ததால் Deemed காலேஜில் 25 லட்ச ரூபாய் கட்டி மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டார். தற்போது முதலாமாண்டு இளங்கலை மருத்துவம் படித்து வருகிறேன். அப்படினா காசு இருக்கிறவன் தான் டாக்டராக முடியுமா? அப்போ காசு இருக்கிறவன் டாக்டரானா, அவன் காசு எடுக்க தானே பாப்பான். மக்களுக்கு நல்லது செய்ய எப்படி பார்ப்பான்.

நல்லா படிக்கிற பையன்

நீட் தேர்வு தான் சரியான டாக்டரை உருவாக்கும்னு சொன்னா, அப்போ இதுநாள் வரை நீங்க பாத்த டாக்டர்கள் என்ன டுபார்க்கூரா? என்னோட நல்லா படிக்கிற பையன் ஜெகதீஷ். இரண்டு முறையும் என்னை விட அதிக மதிப்பெண் வாங்கியிருக்கான். இந்த முறை 400 மார்க் வாங்கியுள்ளான். நீட் தேர்வை வைத்து இன்னும் எத்தனை பேரை சாகடிக்கப் போறாங்களோ இந்த மத்திய அரசு? சிபிஎஸ்இ பாடத்திட்டம், சைதன்யா பிராண்ட் பள்ளியில் படித்து முடித்த எங்களுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்குனா?

வருஷத்துக்கு 15 லட்ச ரூபாய்

அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் எப்படி சமாளிக்கிறாங்கனு நினைச்சு கூட பார்க்க முடியவில்லை. 720 ஃபுல் மார்க் எடுத்து வந்த மாணவர் வேலம்மாள் பள்ளியில் படித்து வந்தவர். ஒரு வருஷத்துக்கு 15 லட்ச ரூபாய் கட்டி வந்திருக்கிறார். காசு போட்டவன் அந்த காசை எடுக்கணும்னு தானே சிந்தனையில ஓட்டிட்டு இருக்கும். அவனுக்கு எப்படி மக்கள் பணியாற்ற வேண்டும் எனத் தோன்றும்.

திமுக அரசு என்ன செய்யப் போகிறது?

நீட் தேர்வு மூலம் தகுதியற்ற ஒருவர் மருத்துவராகி உங்களுக்கு நாளை சிகிச்சை அளிக்கும் போது தான் தெரியவரும். எதிர்கால மருத்துவ கட்டமைப்பை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் என்று மாணவன் ஃபயாஸ்தின் தெரிவித்தார். இந்த விஷயங்களை திமுக அரசு தங்கள் சட்டப் போராட்டத்திலும் எடுத்து வைக்கலாம். அந்த அளவிற்கு மிகவும் சரியான, நியாயமான விஷயங்களை முன்வைத்திருப்பதாக சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.