தஞ்சாவூர், ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 6-ம் தேதி அம்ரித் திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. பிதமர் மோடி காணொளி காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பாஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பழனிமாணிக்கம் மத்திய பா.ஜ.க அரசை விமர்சனம் செய்து பேசினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/b20681a4_f008_4af7_b0f2_442de220f117.jpg)
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.க.ஜ-வினர், மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதில், `பழனிமாணிக்கம் செய்த ஊழல் உள்ளிட்டவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது தான் இனி எங்களது முதல் வேலை’ என்று கருப்பு.முருகானந்தம் சாடினார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க-வையும், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்த பழனிமாணிக்கத்திற்கு எதிராக தஞ்சாவூர் ரயில் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அறிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஹா கலந்து கொண்டு பேச இருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என பா.ஜ.க தரப்பில் தெரிவித்து அதற்கான ஏற்பாட்டையும் செய்தனர். இதனால், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., ஜெயச்சந்திரன் தலைமையில், தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத், திருவாரூர் எஸ்.பி., சுரேஷ்குமார் மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் பாதுக்காப்பிற்காக குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கொடி, மைக் செட் அமைக்க வந்த தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகளை தொடக்கத்திலேயே கைதுசெய்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/2d293e90_7935_4339_97ab_24723f3aba5a.jpg)
பல ஊர்களில் இருந்து வந்த பா.ஜ.க.வினரை நகர எல்லையில் வைத்து கைதுசெய்தனர். சிலர் பழனிமாணிக்கம் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
பின்னர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம், “இந்தியாவிலேயே செயல்படாத எம்.பி இந்த தொகுதி எம்.பி. பழனிமாணிக்கம் தான். அவர் பா.ஜ.கவினரை அச்சுறுத்தும் விதமாகவும், 9 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ.க எதுவும் செய்யவில்லை என்று பொது வெளியில் பேசினார். இதனை கண்டித்து பா.ஜ.க சார்பில், கண்டன போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தோம்.
போராட்டத்திற்கு போலீஸாரிடம் அனுமதி கேட்டு ஆறு நாள்களுக்கு மேல் ஆகிறது. அனுமதி உண்டு என்றவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது, மீறினால் கைது செய்வோம் என்றனர். இரவில் நடந்தது என்னவென்று தெரியவில்லை. தி.மு.க அரசின் அச்சுறுத்தலுக்கு காவல்துறை பயந்து விட்டதா? இஸ்லாமிய அமைப்பு ஒன்றும், தி.மு.க, இளைஞரணியினரும் கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி கேட்டதால் எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
தஞ்சாவூர் எஸ்.பி ஒரு தலைபட்சமாக ஆளும்கட்சிக்கு சாதகமாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் தி.மு.கவினருக்கு கொடி கட்ட, பிளக்ஸ் வைக்க, ஆர்ச் அமைக்க அனுமதி கொடுக்கிறார். பா.ஜ.க மற்றும் அதி.மு.கவினருக்கு அனுமதி மறுக்கிறார். இதனால் காவல்துறை அரசின் ஏவல் துறையாக இருக்கிறதா என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.
இரண்டு முறை மத்திய அமைச்சர், நான்கு முறை எம்பி என ஆறு முறை பதவியில் இருந்த பழனிமாணிக்கம், தஞ்சாவூர் தொகுதிக்கு என்ன செய்து இருக்கிறார். இது குறித்து மக்களுக்கு தெரிவிக்கவே ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தோம். அத்துடன் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றுள்ளார் பழனிமாணிக்கம். ஸ்மார்ட் சிட்டி, மருத்துவக்கல்லுாரி கட்டடம் கட்ட நிதி ஓதுக்கீடு, நெடுஞ்சாலை வசதி என பலவற்றை மத்திய அரசு செய்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/2899a751_313b_46cd_ad87_22ae1e8ab996.jpg)
பா.ஜக அரசு செய்த திட்டங்கள், பயனடைந்த மக்கள் குறித்து விளக்கவே ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தோம். ஆனால் போலீஸார் பா.ஜ.கவினரை தஞ்சாவூர் நகருக்கு உள்ளே வரமுடியாத அளவிற்கு தடுத்து கைதுசெய்துள்ளனர்.
காவல்துறை காவல்துறையாக செயல்பட வேண்டும் தி.மு.கவினரை போல் செயல்படக் கூடாது. அப்படி செயல்பட்டால் உங்களுக்கு யூனிபார்ம் தேவையில்லை, நீங்கள் திமுக வேட்டி கட்டிக்கொண்டு செயல்படலாம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க அரசையும், செயல்படாத எம்.பியையும் கண்டிக்கிறோம். சிறையில் அடைத்தால் கூட போராட்டத்தை கைவிடமாட்டோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தேசிய அளவிலான நிர்வாகிகளை அழைத்து வந்து பழனிமாணிக்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்’’ என்றார்.