இந்த ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை போட்டி இந்தியா நடத்துகிறது. அகமதாபாத், சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மைதானங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் கோலாகலமாக நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கிறது. இயல்பாகவே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் என்றால் அனல் பறக்கும். உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அதே எதிர்பார்ப்பு இந்த முறையும் இருக்கிறது.
முதலில் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருந்த இந்தப் போட்டி இப்போது ஒருநாள் முன்பாக அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஏனென்றால் அப்போது நவராத்தி கொலு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் இதனைக் கணக்கிட்டு போட்டி தேதியை இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்றி அமைத்துள்ளது. இந்நிலையில், அகமதாபாத்தில் இருக்கும் ஹோட்டல் ரூம் விலைகள் எல்லாம் முன்னெப்போதும் இல்லாததை விட பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்கும் நாள், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் அங்கு தங்கும் ரூம்களின் ஒருநாள் வாடகை எல்லாம் 50 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சொகுசு விடுதிகள் வசூலிக்கின்றன.
சாதாரண நாட்களில் வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு இருந்த ஹோட்டல்கள் எல்லாம் இரண்டு நாள் வாடகையாக 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பதை வைத்தே இந்த விலை ஏற்றம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் வருவார்கள் என்பதால் அவர்களை குறி வைத்து இந்த விலையேற்றத்தை ஹோட்டல் உரிமையாளர்கள் செய்துள்ளனர். இது இந்தியாவில் இருந்து செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
அக்டோபர் 15 ஆம் தேதி போட்டி என அறிவிக்கப்பட்டதும் பலரும் அங்குள்ள ஹோட்டல்களில் ரூம்களை புக் செய்தனர். ஆனால் இப்போது போட்டி தேதி மாற்றியமைக்கப்பட்டுவிட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஹோட்டல் முன்பதிவை ரத்து செய்துவிட்டு, இப்போது போட்டி நடக்கும் தேதிக்கு ஏற்ப ஹோட்டல் ரூம்களை முன்பதிவு செய்ய தேடியுள்ளனர். அப்போது தான் அவர்களுக்கே தெரிந்தது, முன்பு முன்பதிவு செய்ததைக் காட்டிலும் ஹோட்டல் ரூம்களின் விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.