சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபி க.வெங்கட்ராமன், சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உட்பட 15 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் பெ.அமுதா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சிபிசிஐடி கூடுதல் டிஜிபி க.வெங்கட்ராமன், சென்னை சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், உளவுப் பிரிவு டிஐஜி சு.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் பஹீ.ஷாஜிதா, தனிப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை டிஎஸ்பி ஹ.கிருஷ்ணமூர்த்தியின் பணியை பாராட்டி சிறந்த பொது சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.
அதேபோல, புலன்விசாரணை பணியில் ஈடுபாடு, அர்ப்பணிப்புடன் மிக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் புலன்விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கம் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாநகரம் கொங்கு நகர் சரக உதவி ஆணையர் வே.அனில் குமார், மதுரை சரக சிபிசிஐடி டிஎஸ்பி கோ.சரவணன், காவல் ஆய்வாளர்கள் ர.மாதையன் (கோயம்புத்தூர் சூலூர்), மா.அமுதா (பீளமேடு), ம.அனிதா (தூத்துக்குடி மாசார்பட்டி), அ.சித்திராதேவி (திருப்பூர் இணைய குற்றப் பிரிவு), ந.மணிமேகலை (சென்னை பெருநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு), அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் இரா.விஜயா (சிவகங்கை மானாமதுரை), ஆ.மகாலட்சுமி (அரியலூர்), திருச்சி சிபிசிஐடி ஆய்வாளர் மறைந்த கு.சிவா இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கம் வழங்கப்படும். இந்த விருதுகளை முதல்வர் மற்றொரு விழாவில் வழங்குவார்.