வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: 1989ம் ஆண்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் வெடித்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் சுதந்திர தினம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும். ஆனால், தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு, எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடினர். எங்கும் துப்பாக்கிச்சப்தம் இல்லை. எல்லா பகுதிகளிலும் மக்கள் ஆர்வமாக சுதந்திரதின விழாவில் பங்கேற்றதை காண முடிந்தது.
நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10வது முறையாக தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்தந்த மாநிலங்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்றி மரியாதை செய்தனர். இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் மக்கள் முதன்முதலாக எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
1989ம் ஆண்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் வெடித்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால், நடப்பாண்டில், பாதுகாப்பு கட்டுப்பாடுகளோ, ஊரடங்கு உத்தரவோ, தகவல் தொடர்பு தடைகளோ, வேலைநிறுத்தப் போராட்டங்களோ இன்றி நிதானமான சூழலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் ஜம்மு-காஷ்மீரின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஆர்வமுடன் பெருமளவில் பங்கேற்றனர். புதுப்பிப்பு, மேம்பாட்டு பணிகளுக்காக இந்த மைதானம் கடந்த 2018ம் ஆண்டில் மூடப்பட்ட நிலையில், ஐந்தாண்டுகளுக்க்கு பிறகு பக்ஷி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனால், அம்மைதானத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டன. இந்த மைதானத்திற்கு செல்ல மக்கள் ஆர்வமாக நீண்ட கியூவில் நிற்பதை காண முடிந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக பக்ஷி மைதானத்தில் சுதந்திர தின கொண்டாடங்கள் நடைபெற்றது. பொதுவாக சுதந்திர தின நிகழ்ச்சிகள் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் தலைமையில் நடைபெறும். ஆனால், அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, கடந்த 2019ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, நிர்வாக அதிகாரியாக செயல்படும் துணை நிலை கவர்னர் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement