தமிழகம் முழுவதும் இன்று இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில் ராமநாதபுரம், கேணிக்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் கார்த்திகேயன் என்பவர், வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறி சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், “சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளாகியும் இன்னும் சுதந்திரம் இல்லாமல் இந்தச் சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த தேசத்துக்காகவும், இந்த சமூகத்துக்காகவும் நான் புனிதமாக நேசிக்கும் இந்தக் காவல் பணியை 77-வது சுதந்திர தினமான இன்று ராஜினாமா செய்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கொடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இவரது இந்த வீடியோ, ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இது தொடர்பாக கேணிக்கரை காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தபோது, “கார்த்திகேயனின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் எனப் புரியவில்லை, இன்று காலைவரை எல்லோரிடமும் சகஜமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற அறிகுறியே அவரிடம் தெரியவில்லை, உங்களைப்போல நாங்களும் அவரது வீடியோவைப் பார்த்துதான் அதிர்ச்சியில் இருக்கிறோம்” என்றனர்.
கார்த்திகேயன் தனது ராஜினாமா கடிதத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் கொடுப்பதற்காக, அவரது அலுவலகத்துக்குச் சென்ற நிலையில், முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைப் பார்வையிடுவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சென்றிருப்பதால், பின்னர் வருமாறு அங்கிருந்த காவலர்கள் திருப்பி அனுப்பியிருக்கின்றனர். பின்னர், இன்று மாலை மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரையை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் கார்த்திகேயன்.இதுகுறித்து அவரிடம் நாம் பேசிய போது, காவல்துறையில் பணியாற்றிக் கொண்டு என்னால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்த கருத்துக்களை வெளிப்படையாக பேச முடியவில்லை. அதன் காரணமாக என்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளேன். பா.ஜ.கவில் இணைந்து மக்கள் பணியாற்ற இருக்கிறேன் என கூறினார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs