உதகை: உதகையில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 55 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 566 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வழங்கினார்.
நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. 77வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தேசிய கொடியேற்றினார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.பிரபாகர் உடனிருந்தார். தொடர்ந்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இந்த அணி வகுப்பில் காவல்துறை, ஊர்காவல் படை, தீயணைப்புத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி என்.சி.சி., மாணவ, மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
55 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 566 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வழங்கினார். விழாவில் தோடர், கோத்தர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்ஷினி, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகா ராணா, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணி வகுப்பில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.