புதுடில்லி சிங்கப்பூர் நிறுவனத்துக்கு எதிராக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ள உச்ச நீதிதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கும்படி அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி, 2012ல் புதுடில்லியில் பேட்டி அளித்தார்.
அப்போது, தங்கள் நிறுவனத்தின் மீது அவதுாறாக குற்றம் சாட்டியதாக, கிழக்காசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த, ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங்’ என்ற நிறுவனம், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், அவரது மனுவை தள்ளுபடி செய்தது. சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சாமி தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதிகள், இது குறித்து பதில் அளிக்கும்படி சிங்கப்பூர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement