திருநெல்வேலி: தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர், அவரது தங்கையை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் மத்தியில் நச்சுக் கருத்துகளை பரப்புவது புதிதல்ல. நீண்டகாலமாகவே இதுபோன்ற சாதிய, மதவாத அரசியல் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. அகில இந்திய அளவில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் இதை செய்து வருகின்றன. இதுபோன்ற சக்திகளால் இளம் தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் நீடிக்கிறது. இந்த போக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
நாங்குநேரி சம்பவத்துக்குப்பின் நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். நாங்குநேரி சம்பவத்தை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கல்வி வளாகங்களில் நடைபெறும் சாதிய, மதவாத பிரச்சினைகள் குறித்தும், மாணவர்கள் மத்தியில் நச்சுக் கருத்துகளை பரப்புவதை குறித்தும் விரிவாக ஆய்வு செய்யும் இந்த ஆணையம் நல்ல வழிகாட்டுதலை தரும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்தை தமிழக முதல்வர் பாதுகாக்க வேண்டும். மாணவரின் தாய்க்கு அரசின் சார்பில் நல்ல வீடு வழங்க வேண்டும். பாதுகாப்பாக அவர் பிள்ளைகளை படிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முதல்வரை சந்திக்கும்போது இந்த கோரிக்கையை எடுத்துரைப்பேன். பள்ளி மாணவர்களிடையே இந்த வன்மம் பரவுவதற்கு சமூக சூழல் காரணமாக இருக்கிறது.
சாதி பெருமையை பேசுவது, ஆண்ட பரம்பரை, ஆண்ட வம்சம் என்று சொல்லும் அரசியல், பிற சமூகத்தின்மீதான வெறுப்புக்கு இடம் கொடுக்கிறது. திரைப்பட இயக்குநர் பாரதிராஜா 30 ஆண்டுகளுக்குமுன் வேதம் புதிது என்ற திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், பிள்ளைகளை சுதந்திரமாக விடுங்கள், அவர்களிடம் நச்சுக் கருத்துகளை விதைக்காதீர்கள் என்று காட்சி அமைத்திருப்பார். அதையே இப்போது சுட்டிக்காட்டுகிறேன்.
இளம் தலைமுறையிடம் சாதி பெருமைகளை பேசுவது, தலித், பழங்குடியின, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைப்பது தடுக்கப்பட வேண்டும். இந்த சமூகமே அதற்கு பொறுப்பேற்கும் நிலை இருக்கிறது. தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க உளவுப்பிரிவு, கியு பிரிவு இருப்பதைப்போல் சாதிய, மதவாத சக்திகளை கண்காணிக்க சாதி, மதவாத அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாங்குநேரி, வள்ளியூரில் சாதி பெயரால் வன்முறைகள் தொடர்கின்றன. இதைத்தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எனவே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து வரும் 18-ம் தேதி சென்னையிலும், 20-ம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.