`என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்தை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தேசியக்கொடி ஏற்றி தொடங்கினார். பின்னர் குழித்துறை சந்திப்பில் அண்ணாமலை பேசுகையில், “இந்த நடைப்பயணத்தை ஒரே ஒரு காரணத்துக்காக கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பிக்கவில்லை. தேசியக் கட்சி உள்ளதால் 10 லட்சம் பேர் இங்கு திரளுவார்கள். அந்தக் காரணத்தால்தான் சில நாள்கள் தாமதமாக இங்கு வந்தோம். கன்னியாகுமரியை பா.ஜ.க கோட்டையாக வைத்திருந்தீர்கள். அதுபோல மாநிலம் முழுவதும் உருவாகி வருகிறது. திட்டமிட்டுத்தான் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஆகஸ்ட் 15-ம் தேதி உங்கள் இடத்துக்கு வந்தோம். இதைவிட சிறந்த மண் கிடையாது. வேலுத்தம்பி தளவாய் பிறந்த மண். சுவாமி விவேகானந்தர் மூன்று நாள்கள் தவமிருந்தார். அய்யா வைகுண்டர், பல்துறை வித்தகர் கவிமணி, தாணுலிங்க நாடார், மார்ஷல் நேசமணி ஆகியோர் பிறந்த மண். காமராஜரை விருதுநகரில் சூழ்ச்சியால் தோற்கடித்தப் பிறகு, நாகர்கோவில் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த மண்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230815_WA0013.jpg)
தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சி 28 மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 1978-ல் இந்திரா காந்தி கைதுசெய்யப்பட்டபோது வெள்ளிக்கோட்டில் பஸ்ஸை எரித்தார்கள். அதில் கர்ப்பிணி உட்பட 9 பேர் இறந்தார்கள். அதனால்தான் குமரியில் ‘தீ கொளுத்தி காங்கிரஸ்’ என்பார்கள். வடகிழக்கை காங்கிரஸ் துண்டுதுண்டாக வைத்திருந்தது. வடகிழக்கு மாநிலங்களுக்கு 51 முறை மோடி சென்றிருக்கிறார். பா.ஜ.க ஆட்சியில் அந்த மாநிலங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பால் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்திரா காந்தி இறந்தபோது டெல்லியில் சீக்கியர்களைக் கொன்றது ஆர்கனைஸ்டு கலவரம். அரசே அதைச் செய்தது. காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரில் 60-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் நிர்வாணமாக நடந்துவந்தார்களே, அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள். இப்போது வடகிழக்கு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. ஒரு சமூகத்துக்கு எஸ்.டி அந்தஸ்து கொடுத்ததால், மற்றொரு சமூகம் கலவரம் செய்தது.
காஷ்மீர் இஸ்லாமியர்களும் நன்றாக இருக்க வேண்டும் என 370-வது சட்டப்பிரிவு திரும்ப எடுக்கப்பட்டது. இப்போது காஷ்மீருக்கு ஒரு கோடியே 88 லட்சம் பேர் சுற்றுலாப் பயணிகளாகச் சென்றிருக்கின்றனர். இந்தியாவை அமைதிப் பூங்காவாக பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார். எங்கும் குண்டு வெடிப்பு கிடையாது. கன்னியாகுமரிக்கு ஒரே பிரச்னை டெவலப்மென்ட் மட்டுமே. இங்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதைத் தவிர எந்தப் பிரச்னையும் இல்லை. 2014 முதல் 2019 வரை 48,000 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித்திட்டங்களை கன்னியாகுமரிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டுவந்தார்கள். ஆனால், அதன் பிறகு 5 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய்கூட செலவிடவில்லை. மீதமுள்ள 28,000 கோடி செலவு செய்யப்படாமல் இருக்கிறது. இங்குள்ள எம்.பி காலை முதல் இரவுவரை மதம் என்பதை மட்டுமே பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி முதலில் மதத்திலிருந்து வெளியே வரட்டும். இங்கு மத்திய அரசின் நிதி செயல்படுத்தப்பட்டுவிட்டது என்று எம்.பி சொன்னால், அவர் வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230815_WA0015.jpg)
தமிழகத்தில் மகனுக்கும், மருமகனுக்கும் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின். அதைத்தான் `ரூ.30,000 கோடிக்கு மேல் சுருட்டியிருக்கிறார்கள்’ என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்லியிருக்கிறார். கேரளாவில் மகளுக்கும், மருமகனுக்கும் பினராயி விஜயன் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் பினராயி விஜயனின் மகள் ரூபாய் 1.72 கோடியை ஒரு தனியார் கம்பெனியிலிருந்து வாங்கியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கேரளம் கன்னியாகுமரியை வஞ்சிக்கிறது. இங்கிருந்து கனிம வளத்தைக் கொண்டுபோய்விட்டு, அங்கிருந்து மருத்துவக் கழிவைக் கொண்டுவந்து இங்கு கொட்டுகிறார்கள். 18 ஆண்டுகளாக நெய்யாற்றில் தண்ணீர் விடவில்லை. இது பற்றி ஒரு எம்.எல்.ஏ சட்டசபையில் கேட்டதற்கு, தண்ணீர் இல்லாததற்கு எதற்குப் பணம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கேட்கிறார். அதேபோலத்தான் செண்பகவல்லி அணை, முல்லைப் பெரியார் அணைகளில் நம் உரிமைகளை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். மோடியை எதிர்ப்பதாகக் கூறி, நம் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/IMG_20230815_WA0014.jpg)
தமிழ்நாட்டில் 5,500-க்கும் மேல் டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. 45 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருகிறது. தி.மு.க அமைச்சர்கள் நடத்தும் சாராய ஆலைகள்தான் டாஸ்மாக்குக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. மொத்தம் சப்ளை செய்யப்படும் 52 லட்சம் கேஸ்களில் 42 சதவிகிதம் அவர்கள் கம்பெனியிடமிருந்துதான் வருகிறது. டாஸ்மாக்கை நம்பி தமிழகத்தை நடத்தும் கேவலமான நிலைக்கு மாற்றியிருக்கின்றனர். தமிழகத்துக்கு 7.53 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. எல்லா துறைகளிலும் தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டுவருதாக முதல்வர் சொன்னார். ஆனால், கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது” என்றார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs