சென்னை எம்.ஜி.ஆர் நகர் வளையாபதி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 12-ம் தேதி இவர் வீட்டின் வாசலில் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். பின்னர் இரவு 11:30 மணியளவில் ஏதேச்சையாகப் பார்த்தபோது சுப்பிரமணியத்தின் பைக்கை இரண்டு பெண்கள் கள்ளச்சாவி போட்டு திருட முயன்றனர். அதைப் பார்த்த சுப்பிரமணியம், உடனடியாக `திருடி, திருடி’ என சத்தமிட்டார். பின்னர் அவர் வெளியில் வந்தார். அதனால் அந்த இரண்டு பெண்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் சுப்பிரமணியம் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். ஸ்கூட்டரைத் திருட முயன்ற இரண்டு பெண்களை போலீஸார் தேடிவந்தனர். இதற்காக அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டது எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஈஸ்வரி (20), நித்யா (20) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார், “கைதுசெய்யப்பட்ட நித்யாவும் ஈஸ்வரியும் தோழிகள். இவர்கள் இருவரும் சேர்ந்து பைக்கைத் திருடி அதை குறைந்த விலைக்கு விற்று ஆடம்பரமாக வாழ திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் பைக்கைத் திருடும்போது ஸ்கூட்டரின் உரிமையாளரே பார்த்துவிட்டதால், அதை திருட முடியவில்லை. இவர்கள் இருவரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.