புதுடெல்லி: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் சாதிவாரியாக கணக்கெடுக்கும் முதல்கட்ட பணி நடைபெற்று முடிந்தது. இந்த பணி ஜனவரி மாதம் 7 ம் தேதி முதல் ஜனவரி 21-ம் தேதி வரை நடந்தது.
மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்ற வகையில் இந்த பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரலில் 2-ம் கட்டப் பணிகள் தொடங்குவதாக இருந்தன. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவற்றை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏக் சோச் ஏக் பர்யாஸ் என்ற அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் 18-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
18-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரும்போது பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு முழுவதையும் ஆய்வு செய்து விட்டு வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். என்ஜிஓ சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார்.