டைனோசர் என்றால் பொதுவாகவே பிரமாண்ட உருவமும், ஒருவித பயமும் தான் மனதுக்குள் தோன்றும். இந்த டைனோசரில் ஊன் உண்ணிகள், தாவர உண்ணிகள் என்று பல வகைகள் உள்ளன.
உலகில் பல்வேறு இடங்களில் டைனோசர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அகழாய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதையடுத்து இந்தியாவிலும் தற்போது டைனோசர் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
167 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இனம்:
ஐஐடி ரூர்க்கியும் இந்திய புவியியல் ஆய்வு மையமும் சேர்ந்து நடத்திய அகழாய்வில், நீண்ட கழுத்துடைய, தாவரங்களை உண்ணும், ‘டிகிரியோசாரிட்’ (dicraeosaurid) டைனோசரின் பழைமையான புதைவடிவங்கள், ஜெய்சால்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்தியாவில் டைனோசரின் பரிணாம வளர்ச்சிக்கு மையமாக இருக்கிறது.
சயின்டிஃபிக் ரிப்போர்ட் (scientific report) என்னும் சர்வதேச பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில் இந்த புதைவடிவ எச்சங்கள் 167 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனவும், இதுவரையிலும் விஞ்ஞானிகளே எதிர்கொள்ளாத புதிய இனத்தைச் சேர்ந்தது இது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜெய்சால்மர் பகுதியில் டைனோசர்கள் கூட்டமாக வாழ்ந்தற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாலைவனத்தைத் தழுவி பெயர்:
இந்த புதிய வகை டைனோசர் இனத்திற்கு அதன் புதைவடிவ எச்சங்கள் கண்டறியப்பட்ட ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தின் பெயரைத் தழுவி `தாரோசரஸ் இண்டிகஸ்’ (Tharosaurus indicus) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
“விஞ்ஞானிகளின் கூற்றுப்படி டிகிரியோசாரிட் டைனோசரின் புதைவடிவங்கள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவே முதல் முறை.
2018 ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு நடத்திய திட்டமிட்ட புதைவடிவ ஆய்வு மற்றும் அகழாய்வு, இந்த டைனோசர் வகையை கண்டுபிடிக்க வித்திட்டது” என்கிறார் ஐஐடி ரூர்க்கியின், முதுகெலும்பிகளின் தொல்லுயிரியல் பேராசிரியர், சுனில் பாஜ் பாய்.
கண்டெடுக்கப்பட்ட புதை வடிவங்கள் 167 மில்லியன் ஆண்டுகள் பழைமையானவை. இவை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பழமையான டிகிரியோசாரிட் இனத்தைச் சேர்ந்தது. இதற்கு முன்பாக பழமையான (164 – 166) புதிய வடிவம் சீனாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.