கன்னியாகுமரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்ற நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான நடைப்பயணம் களியக்காவிளையில் தொடங்கி குழித்துறையில் நிறைவுபெற்றது. அடுத்தகட்டமாக கிள்ளியூர் தொகுதிக்கான நடைப்பயணத்தை மாலையில் மேற்கொள்ளவிருக்கிறார் அண்ணாமலை. முன்னதாக கன்னியாகுமரிக்கு வந்த அவர், கன்னியாகுமரியிலுள்ள காந்தி நினைவு மண்டப வளாகத்திலுள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “இந்த நன்நாளில் நாடு மிகப்பெரிய உயரத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. 2047-ல் இந்தியா வல்லரசாகும் என்ற பாரத பிரதமர் கனவு நிறைவேற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றிபெற்று, மருத்துவம் படித்து வருகிறார்கள். நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்தார். நீட்டில் முதல் 10 இடங்களில் நான்கு மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். முதன்முறையாக அரசுப் பள்ளியில் படித்து, கிராமத்திலிருந்து மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்குப் போகிறார்கள். நாடோடி பழங்குடியினர் சமூகத்திலிருந்து மருத்துவம் படிக்கப் போகிறார்கள். அவர்களை முதல்வர் பாராட்டவில்லை. தி.மு.க-வுக்கு என்னதான் பிரச்னை. நீட்டை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் நீட்டால் பிரச்னை இல்லை. நீட்டுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் போட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். புள்ளிவிவரங்களை வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை தி.மு.க விளக்க வேண்டும். முதல்வர் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க, நீட்டைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருப்பது முறையா… அ.தி.மு.க பொன்விழா மாநாடு மிகச் சிறப்பாக நடக்க எங்கள் வாழ்த்துகள்.
நாங்குநேரியில் சாதிப் பெயரைச் சொல்லி சண்டைப்போடுகிறார்கள். மாணவரின் வீட்டுக்குச் சென்று மாணவனையும், அவரின் தங்கையயும் வெட்டுகிறார்கள். வெட்டியது ரௌடிகள் அல்ல மாணவர்கள். சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பள்ளிக்கூட வளாகத்தில், சாதியை வைத்து கொடூரமான அட்டாக் நடக்கிறது. வேங்கைவயல் மற்றும் நாங்குநேரி விவகாரத்தில் பல கட்சியினர் மெளன விரதத்தில் இருக்கின்றனர். வேங்கைவயலில் மலம் கலக்கப்பட்ட விஷயத்தில் டி.என்.ஏ சோதனை எல்லாம் செய்தார்கள், 74 நாள்கள் கடந்த பின்னரும் இதுவரை ஒருவரைக்கூட கைதுசெய்யவில்லை. திருமாவளவனிடம் கேட்டால் தமிழகத்தில் எது நடந்தாலும் ஆர்.எஸ்.எஸ் சதி என்கிறார். தோழமைச்சுட்டுதல்கூட இல்லை. ஸ்டாலின் முதல்வரான பிறகும் எதிர்க்கட்சிக்காரர் போன்று அரசியல் செய்கிறார். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கு விரோதத்தைத் தூண்டுகிறார்.
பொது மேடையில் பட்டியலின மக்கள் பிரதிநியை சாதியைச் சொல்லி திட்டும் நிலை தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இன்றைக்கும் திராவிட பாரம்பர்யத்தில் வந்தவர்கள் எனச் சொல்லிக்கொண்டு, தி.மு.க தலைவர்களே சாதியைச் சொல்லி திட்டுகிறார்கள். அப்புறம் எப்படி சாதி ஒழியும். பழங்குடிச் சமூகத்தினரை நிக்கவைத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியானது. அதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார். அதுபோல வன்மத்தைத் தூண்டக்கூடிய எத்தனை படங்கள் எடுக்கிறார்கள். ரெட் ஜெயன்ட்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஹீரோவாக படம் எடுக்கிறார்கள். இதை பிஞ்சு நெஞ்சங்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். படம் சமூக அக்கரையில் எடுப்பது வேறு, சமூக தாக்கத்தை படம் எடுப்பது என்பது வேறு, வன்முறையை தூண்டுவதை எடுப்பது வேறு. அதை முதலமைச்சர் பாராட்டுகிறார்” என்றார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs